பெண்களுக்கு விரைவில் ரூ.1000: நிதியமைச்சர்!

Published On:

| By admin

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் நிறைவடைந்தும் இன்னும் இத்திட்டம் கொண்டு வரப்படவில்லை. 2.15 கோடி ரேஷன் கார்டுகள் தமிழகத்தில் உள்ளன. இவை அனைத்துக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கினால் ஆண்டுக்கு 25 ஆயிரத்து 800 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் தமிழக அரசு நிதிச் சுமையில் இருப்பதால் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த சூழலில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் தரவுகள் தான் அடிப்படை. எத்தனை பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன சூழ்நிலை இருக்கிறது என்று கண்டுபிடிப்பது தான் அடிப்படை. ஏற்கனவே நகைக் கடன் பயிர் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், ரேஷன் கடைகளில் நான்காயிரம் ரூபாய் கொடுத்தபோது தவறு நடந்தது தெரியவந்தது.

அதனால் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அதைத் தெளிவுபடுத்தி எவ்வளவு விரைவில் வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும் ”என்று கூறினார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share