{ரவுடி என்கவுன்ட்டர்: நெல்லையில் நடந்தது என்ன?

politics

நெல்லையில் ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் நீராவி மேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய பின்னர் தனது பெயரை ஊர்ப் பெயருடன் இணைத்து நீராவி முருகன் என மாற்றிக் கொண்டார். அதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் இவர் போலீசார் பிடிக்க வந்தால் மின்னல் வேகத்தில் நீராவி போல் தப்பி விடுவதால், தனது பெயரை நீராவி முருகன் என்று அப்படியே வைத்துக் கொண்டதாக அவர் தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறியதாகவும் தகவல்கள் உண்டு.

இவர் மீது தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குஜராத்திலும் கூட இவர் மீது வழக்கு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி திமுக மாவட்ட துணை செயலாளர் ஏ.சி.அருணா கொலை வழக்கில் நீராவி முருகன் முதல் குற்றவாளியாக இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அண்மையில் நடந்த கொலை வழக்கில் நீராவி முருகனுக்குத் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் நீராவி முருகனைக் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

அதே சமயத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த சூழலில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பதுங்கி இருப்பதாகத் திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று நெல்லை வந்தனர்.

நாங்குநேரிக்கு போலீசார் சென்றபோது நீராவி முருகன் அங்கிருந்து களக்காடு சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

அவரை போலீசார் சுற்றி வளைத்த போது துணை ஆய்வாளர் இசக்கி ராஜாவை நீராவி முருகன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். நீராவி முருகன் தாக்க முயன்றபோது எஸ்ஐ இசக்கி ராஜா உடன் சென்ற மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நீராவி முருகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த என்கவுன்ட்டர் குறித்து தகவல் அறிந்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்பி சரவணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த ரவுடியின் உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதுபோன்று இந்த சம்பவத்தின்போது காயமடைந்த 3 காவலர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி சரவணன், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நீராவி முருகனுக்குப் பல வழக்குகளில் தொடர்பு உள்ளது. சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த கொள்ளை வழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஐ.இசக்கி ராஜா தலைமையிலான போலீசார் இங்கு தேடி வந்தபோது, களக்காடு பகுதியில் ரவுடியை சுற்றிவளைத்தனர்.

அப்போது போலீசாரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காகக் கைத்துப்பாக்கி மூலம் ஒரு ரவுண்டு சுட்டதில் நீராவி முருகன் உயிரிழந்தார். குறிப்பாகத் தனியாகச் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வதுதான் நீராவி முருகனின் வாடிக்கை.

இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணையில் நடைபெறும். ரவுடி தாக்கியதில் போலீசாருக்கு தலை நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.