எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்: முயற்சியைத் தொடங்கிய சோனியா 

Published On:

| By admin

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்…  ஆளுங்கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளிலும் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இப்போதைய வாக்கு வலிமைப்படி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. மேலும் ஒடிசாவின் பிஜு ஜனதா தள், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற காங்கிரஸ், பாஜக இரு அணிகளிலும் இல்லாத கட்சிகளின் ஆதரவையும் பெற பாஜக முயன்று வருகிறது.
இன்னொரு பக்கம் வெற்றி பெற இயலாது என்ற சூழலிலும் இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியாக நின்று பொது வேட்பாளரை நிறுத்தி தங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்ற யோசனையும் காங்கிரஸ் தரப்பில் இருக்கிறது,.
எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் தேதி அறிவித்த நேற்றே தனது நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார்.
காங்கிரஸ்  கட்சியின் ராஜ்யசபா குழு தலைவரான  மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேசுமாறு சோனியா உத்தரவிட்டிருக்கிறார். அதன்படியே மல்லிகார்ஜுன கார்கே நேற்று முதல் எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்புகொள்ள தொடங்கிவிட்டார்.  தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தேசிய வாத காங்கிரஸ்  தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சோனியா தொடர்புகொண்டிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மல்லிகார்ஜுன கார்கே அனைத்து எதிர்க்கட்சித்  தலைவர்களிடமும் பேசி பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின்  சார்பாக பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.’

இதற்கிடையில்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான பினாய்  விஸ்வம்,    “குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே என்னிடம் ஆலோசித்தார்.  மதச்சார்பற்ற மதிப்பீடுகளையும், முற்போக்குத் தொலை நோக்கும் கொண்ட  ஒரு வேட்பாளரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தரும் என்று தெரிவித்தேன். சோனியா காந்தியும் இதே நிலைப்பாட்டில்தான் இருப்பதாக அவர் தெரிவித்தார்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் செய்யும் முயற்சிகள் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share