sவிரைவில் கட்சி: மா.செ.க்களை அழைக்கும் ரஜினி

Published On:

| By Balaji

விரைவில் கட்சி துவங்கவுள்ள ரஜினிகாந்த், அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை ஆலோசனைக்கு அழைத்துள்ளார்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ரஜினிகாந்த் திரைப்படம் எப்போதெல்லாம் திரைக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சுதான் அதிகம் எழும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, ‘அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும்’ ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

எனினும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில், இன்று வரையில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா, மாட்டாரா என்ற விவாதம் முற்றுப்பெறாமலேயே இருந்துவருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ரஜினியின் பேச்சுக்களில் அரசியல் குறித்தே உள்ளது. குறிப்பாக பாஜகவுக்கு ஆதரவான குரலிலேயே ரஜினிகாந்த் தொடர்ந்து ஒலித்து வருவதாக தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் திமுக, அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நாளை (மார்ச் 5) மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் ரஜினிகாந்த். இதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் அரசியல் கட்சித் துவங்குவது சம்பந்தமாகவும், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளனர்.

கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசும்போது திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் விமர்சித்துப் பேசலாம். ஆலோசனைக்குப் பிறகு அரசியல் கட்சி தொடர்பான பணிகள் வேகமெடுக்கும் எனவும், பிரமாண்ட விழா நடத்தி கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனவும் சொல்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்களில்.

**காசி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share