இந்தி மொழி திணிப்பு விவகாரம் தொடர்பாகத் தமிழக ஆளுநரும் உயர்கல்வித் துறை அமைச்சரும் ஒரே மேடையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று (மே 13) 37ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் துணைவேந்தர்கள் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பின்னர் ஆளுநரும் அமைச்சரும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்ச்சி இதுவாகும்.
இவ்விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படிக்கவேண்டும் என்ற நிலைமையைத் தமிழ்நாடு உருவாக்கியிருக்கிறது. இதனால்தான் தமிழ்நாடு 53 சதவிகித மாணவர் சேர்க்கை உடன் உயர்கல்வியில் முன்னிலையில் இருக்கிறது.
இஸ்ரோ சிவனும் நானும் தமிழ் வழியில் தான் படித்தோம். இன்று இந்திய அளவில் சிவன் உயர்ந்துள்ளார். அதுபோன்றே நானும் பிஹெச்டி பட்டம் பெற்று இன்று அமைச்சராக இருக்கிறேன்.
இன்று கனிவுடன் நான் ஆளுநரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி மொழியைப் படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்தி என்பதே விருப்ப மொழியாகத்தான் இருக்க வேண்டுமே தவிரக் கட்டாய மொழியாக இருக்கக் கூடாது.
தமிழகத்தில் சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் உள்ளூர் மொழியான தமிழையும் பயன்படுத்துகிறோம். மொழி விவகாரம் தொடர்பாக அண்ணா ஒருமுறை கூறும்போது, பூனைக்குத் தனிவழி, எலிக்குத் தனிவழி எதற்கு. பூனை செல்கிற வழியிலேயே எலியும் செல்லலாமே என்றார். அதுபோன்று உலகத்தோடு உரையாடும் ஆங்கிலத்திலேயே நாம் மற்ற மாநிலங்களுடன் உரையாடலாம்.
இந்தி மொழி படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் நம்மூரில் பானிபூரி விற்பவர்கள் இந்தி பேசுபவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்துக்கு என தனி கல்விக்கொள்கை இருக்க வேண்டும்.
அதற்காக மாநில கல்விக் கொள்கையை வகுக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்சினையை ஆளுநர் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
அதுபோன்று தமிழக ஆளுநர், “தமிழகம் ஒரு முற்போக்கான மாநிலம். மற்ற மாநிலங்களை விடவும் தமிழகம் பல துறைகளில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவை முன்னெடுத்து செல்வதில் தமிழகம் தலைமை வகிக்க வேண்டும்.
மத்திய அரசு ஒரு மொழியைத் திணிப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அது உண்மைக்குப் புறம்பானது. தேசிய கல்விக் கொள்கை பள்ளிக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு வரை உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டில் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மத்திய அரசு தமிழை வளர்ப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் இயங்கி வரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை உருவாக்கப்பட்டது போல மற்ற மாநிலங்களிலும் தமிழ் மொழிக்கு இருக்கைகள் உருவாக்க ஆலோசித்து வருகிறோம். பல மாநிலங்களும் இதற்கு இசைவு தெரிவித்துள்ளன.
அதுபோன்று தெற்காசிய நாடுகள் மற்றும் பிற நாடுகளிலும் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்க முயன்று வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் எந்த ஒரு மொழியையும் குறிப்பாக இந்தி மொழியைத் திணிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் ஊக்குவிக்கிறோம்” என்று கூறினார்.
**-பிரியா**