}திருவனந்தபுரம் கோயிலில் தானாக மணி அடிக்கிறதா?

Published On:

| By Balaji

திருவனந்தபுரம் இரட்டை குளங்கரை பகவதி அம்மன் கோயிலில் மாலை நேர வழிபாட்டு வேளையில் தானாக மணி அடிப்பதாக ஒரு காணொலி வாட்ஸ் ஆப்பில் உலா வந்து கொண்டிருக்கிறது. ‘கல்லக்குடி சிவன் கோயில்’ என்ற வாட்ஸ் ஆப் குழுவில் கீழ் காணும் வரிகளுடன் அந்தக் காணொளி பகிரப்பட்டு வந்தது.

“இந்த யுகத்திலும் இந்து ஆலயங்களில் அற்புதங்கள் நிகழத்தான் செய்கிறது.

திருவனந்தபுரம் இரட்டை குளங்கரை ஶ்ரீபகவதி க்ஷேத்திரத்தில் மாலை பூஜை வேளையில் மணி தானாகவே அடிக்கிறது. இவ்வற்புத நிகழ்வை நாமும் கண்ணாரக் கண்டு வாழ்வில் நன்மைகள் கோடி அடைவோமே!.

ஓம் ஶ்ரீ பகவதி தாயே போற்றி போற்றி!!”

மேலும், அந்த காணொளியில் புரோகிதர் மணியை கம்பியில் மாட்டி விட்டு அது தானாக அடிக்க ஆரம்பித்ததும் அங்கிருப்பவர்கள் பேசுவதை உரையாடல் வடிவில் காண்போம்.

சுற்றியிருப்பவர்கள்: அம்மே….தேவி..என்ன இது…இது எப்படி?

கோவில் புரோகிதர்: கடந்த நாள் இந்த அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியபோது யாரும் நம்பவில்லையே!

சுற்றியிருப்பவர்கள்: ஆமாம், யாருமே நம்பவில்லை…யாருமே நம்பவில்லை…

கோவில் புரோகிதர்: பக்தர்களுக்கு இந்த அதிசயம் புரியட்டும்..நேரில் பார்க்கும்போது புரியுமே..

சுற்றியிருப்பவர்கள்: நல்லது..நல்லது. இத்தனை பேருக்காவது புரிந்ததே

கோவில் புரோகிதர்: எல்லாரும் நாங்கள் ஏதோ திருட்டு வேலை செய்து இவ்வாறு நடந்தது என்றார்கள். இது பகவதியின் ஆசீர்வாதத்தால் நடந்தது என்பது இப்போதாவது புரிந்திருக்குமே? இந்த பூஜை முடிந்து நீங்கள் கூட இதனைத் தொட்டுப் பார்க்கலாம் என்று கூறுகிறார். இதோடு அந்த காணொளி முடிகிறது.

**மணி தானாக அடிப்பது உண்மைதானா?**

இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் மலையாள சினிமாத்துறையை சார்ந்த ஒளிப்பதிவாளர் அனுராக் குணா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் அந்தக் கோயிலில் மாலை நேர வழிபாட்டு வேளையில் தானாக மணி அடிப்பது உண்மை தான் என்று உறுதி செய்தார்.

ஆனால் உண்மையில் அந்த மணி தானாக அடிக்கவில்லை. மணியை இரும்பு கம்பியில் மாட்டும் பொழுது கோயில் புரோகிதரால் முதலில் இயக்கப்படுகிறது. பின்னர் அது தானாக தொடர்ந்து அடிக்கிறது. இயல்பாக பார்க்கும் போது அந்த மணி தானாக இயங்குவது போல இருக்கும். இது அறிவியலை கொண்டு காட்டும் வித்தையே தவிர அதிசயம் ஒன்றுமில்லை.

**அந்த அறிவியல் என்ன?**

பள்ளிக்கூட இயற்பியலில் **எளிய ஊசல்(Simple Pendulum)** என்ற தத்துவத்தை படித்திருப்போம். அந்த எளிய ஊசல் முறையே இந்த தானாக மணியடிக்கும் நிகழ்விலும் பின்பற்றப்படுகிறது. சீரான இடைவெளியில் ஒலிக்கும் மணியின் ஓசையை கொண்டே இதனை உறுதி செய்யலாம். சீரான இடைவெளியில் இயங்கும் ஊசலின் பெயர் **கால ஊசல்(Periodic Oscillation)**. காற்றால் இடர்படுவதோ அல்லது செயற்கை இடையூறோ இல்லாதவரை அந்த மணி இயங்கிக் கொண்டே இருக்கும். அதில் அதிசயமோ, அற்புதமோ இல்லை என்பது தான் உண்மை!

**இரா. பி. சுமி கிருஷ்ணா**

**முரளிகிருஷ்ணன் சின்னதுரை**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share