ஆயிரம் காரணங்களை அலசிக்கொண்டிருக்கிறது தமிழகம். சசிகலாவின் அரசியல் விலகலுக்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊடகங்களில் பலர் பேசுவதையும், சமூக ஊடகங்களில் பகிர்வதையும் பார்த்தால் தலை கிறுகிறுக்கிறது. விருமாண்டி படத்தைப் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இந்த விஷயத்தை அலசிக்கொண்டிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம், தினகரன் மீது அவர் நம்பிக்கை இழந்தது, உடல்நிலை பாதிப்பு, அவருடைய பணத்தையும், சொத்துக்களையும் காப்பாற்றுவதற்குத் தரப்பட்ட இழப்பீடு, திமுகவைத் தோற்கடிப்பதற்கு அவராகவே எடுத்த முடிவு… இப்படியாக விதவிதமான யூகங்களும், தகவல்களும் தமிழக அரசியல் களத்தைக் கொதிக்க வைக்கின்றன.
தேர்தலுக்குப் பின்போ அல்லது அதற்கு முன்பாகவோ உண்மையான காரணம் வெளியே வந்துவிடுமென்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு உரிய விதத்தில் அனுப்பிய முக்கியமான தூதுதான், அவர் இப்படியொரு முடிவை எடுப்பதற்குக் காரணமாகியிருக்கிறது என்று அதிமுக வட்டாரத்திலேயே ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அந்தத் தகவலைப் பற்றி முதல்வருக்கு நெருக்கமாகவுள்ள ஒரு விஐபி நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்தார்…
‘‘சசிகலாவுக்கு எந்தவொரு நிர்ப்பந்தமும் எங்கிருந்தும் போகவில்லை. அவர் சிறையிலிருக்கும்போதே, வெளியில் வந்ததும் ஓராண்டுக்கு ஓய்வெடுக்க வேண்டுமென்றே விரும்பினார். நிறையக் கோயில்களுக்குப் போக வேண்டுமென்பதும் அவருடைய விருப்பமாக இருந்தது. அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த வருத்தமும் கிடையாது. அதற்கான முகாந்திரமும் ஏதுமில்லை. அவர் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கு முன்பாக, டெல்லியில் சசிகலாவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததற்கும் அன்றைய அரசியல் சூழ்நிலைதான் காரணம். இதுபோல பல விஷயங்களை சசிகலாவுக்கு உணர்த்துவதற்கு முதல்வருக்கு தகுந்த சூழ்நிலை அமையவில்லை. அதற்கான வாய்ப்பை தினகரன் தரப்பு தட்டிக்கழித்தது.
இப்போது அவர் வெளியில் வந்தபின்பு, சசிகலாவிடம் சில விஷயங்களைத் தெளிவாக விளக்க வேண்டுமென்று இபிஎஸ் விரும்பினார். அதற்கான வாய்ப்பு சமீபத்தில் கிடைத்திருக்கிறது. சசிகலாவுக்கு நம்பிக்கையான ஒருவர் மூலமாக சில விஷயங்களை முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். ‘நீங்கள் சிறைக்குப் போகும்போது என்ன சொல்லி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அதன்படியே நாங்கள் ஆட்சியை நடத்தி வந்தோம். அதில் புகுந்து குட்டிக்கலாட்டா செய்தது தினகரன்தான். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சில விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பாரதிய ஜனதா சொன்ன பல விஷயங்களை ஏற்றுக்கொண்டதும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகத்தான். அதை தினகரன் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிலிருந்து இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு திமுகவுடன் சேர்ந்து அவர் பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். இப்போதும் தேர்தலிலும் அவர் திமுகவுடன் இணைந்துகொண்டு அதிமுகவைத் தோற்க வேண்டுமென்றுதான் வேலை பார்க்கிறார். அதனால் நீங்கள் தேர்தல் முடியும்வரையிலும் அமைதியாக ஒதுங்கியிருங்கள். தேர்தல் முடிந்தபின்பு நாங்கள் உங்களுக்கு உரிய கெளரவத்தையும் மரியாதையையும் கொடுப்போம்.’ என்று முதல்வர் தரப்பில் சசிகலாவிடம் மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது.
அதற்கு சசிகலா தரப்பிலும், ‘நானும் தினகரன் கட்சியை நடத்துவதற்காக எக்கச்சக்கமான தொகையைக் கொடுத்துவிட்டேன். அவர் என்ன செய்தார் என்றே தெரியவில்லை. இப்போதும் அவர் கேட்கிறார். எதை நம்பி அவருக்குப் பணம் கொடுப்பது என்றும் தெரியவில்லை.’ என்று மிகவும் மனம் நொந்து சொன்னதாகத் தெரிகிறது. அது மட்டுமின்றி, தினகரனுக்கு எதிராகத்தான் சசிகலாவின் உறவினர்கள் பலரும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கூறிய பல தகவல்களையும், முதல்வர் சொன்ன உறுதியையும் ஏற்றுத்தான் சசிகலா இந்த முடிவை எடுத்திருக்கிறார்.’’ என்று விரிவாக விளக்கினார்.
அமமுக தரப்பில் இப்படியொரு தகவலைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சின்னம்மா இப்படியொரு முடிவை எடுத்ததற்கு இபிஎஸ் மற்றும் பாரதிய ஜனதா தரப்புதான் காரணமென்று தென்மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. அதை உடைப்பதற்காகத்தான் இதுபோன்ற தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிய எடப்பாடி சொன்னதற்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பேயில்லை!’ என்றார்கள்.
சசிகலாவின் முடிவுக்கு என்னதான் காரணமோ… சசிகலாவுக்கே வெளிச்சம்!
** -பாலசிங்கம்**
�,