|சிறப்புக் கட்டுரை: மதவெறுப்பும் மனசாட்சியும்

politics

மு.இராமனாதன்

கிரிகோரி மீக்ஸ் – அமெரிக்கக் காங்கிரஸின் அயலுறவுக்குழுத் தலைவர். கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் பிரச்சினையில் வழங்கியிருக்கும் தீர்ப்பு கருத்துரிமைக்கு எதிரானது என்று அவர் கவலை தெரிவித்திருக்கிறார். அடுத்து அவர் சொல்லியிருப்பதும் முக்கியமானது. சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து ஒரு தேசத்தின் அரசாட்சியை மதிப்பிட்டுவிடலாம் என்கிறார் கிரிகோரி.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலிய மேற்கு நாடுகளில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிகிறார்கள். அங்கு இஸ்லாமியர்கள் குடியேறியவர்கள். என்றாலும் அவர்களது உடைக்கு அங்கெல்லாம் தடையில்லை. ஆனால் இங்கே இஸ்லாமியர்கள் இந்த மண்ணுக்கு உரிமையானவர்கள். எனினும் தடை விதிக்கிறது கர்நாடக அரசு.

உலகில் வேறெந்த நாட்டிலும் ஒரு மதத்தினரைத் தனிமைப்படுத்துவதற்குப் பள்ளிச் சீருடையைப் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தும் இந்த முயற்சி முதலாவதும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்தத் தொடரில் புதிய கண்ணிதான் ஹிஜாப். ஆனால் முந்தைய கண்ணிகளுக்கும் ஹிஜாப்புக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. முந்தையப் பிரச்சினைகள் மிகுதியும் வட மாநிலங்களில் நடந்தவை. ஹிஜாப் பிரச்சினை உடுப்பியில் நடக்கிறது. அதாவது பிரச்சினை நம் வீட்டு வாசல் வரைக்கும் வந்துவிட்டது. இஸ்லாமியருக்கு எதிரான மனோபாவம் முன்பும் இருந்தது. ஆனால் பரவலாக இல்லை. இப்போது அது நிறுவனமயமாகி வருகிறதோ என்கிற ஐயம் எழுகிறது.


**முந்தைய கண்ணிகள்**

2015ஆம் ஆண்டில் ஒரு செப்டம்பர் மாத இரவில் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் முகமது அக்லக். அவரை உறக்கத்திலிருந்து விழித்துணர்த்தியது ஒரு கும்பல். அவரைத் தாக்கியது. முகமது இறந்து போனார். அவர் செய்த குற்றம் அவரது வீட்டின் குளிர்ப் பெட்டியில் மட்டன் இருந்தது. ஆனால் அது மாட்டுக்கறி என்று அந்தக் கும்பல் கருதியது. ஒருவர் தாக்கப்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் இது போதுமான முகாந்திரமாக இருந்தது. இந்தச் செய்தி அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால் அது ஓர் ஆரம்பம்தான். தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் நிகழ்ந்து வரும் இப்படியான தாக்குதல்களும் குற்றச் செயல்களும் இப்போது செய்தி மதிப்பை இழந்து வருகின்றன. பசுப் பாதுகாவலர்கள், கலாச்சாரக் காவலர்கள், கும்பல் கொலை, ஜெய் ஸ்ரீராம், லவ் ஜிகாத் முதலான சொற்றொடர்கள் செய்திகளில் அடிக்கடி இடம் பெறுகின்றன.

2019இல் நாடாளுமன்றம், குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. பத்தாண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு சட்டம் வரும் என்று சொல்லியிருந்தால் பலரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2015க்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க புதிய சட்டம் வகை செய்தது. ஆனால் அவர்கள் இந்துக்களாகவோ, சீக்கியர்களாகவோ, பௌத்தர்களாகவோ, சமணர்களாகவோ, பார்சிகளாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருக்க வேண்டும். அதாவது இஸ்லாமியர்களாக இருந்தால் குடியுரிமை கிடைக்காது.

இந்தச் சட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்த்தனர். 2020 பிப்ரவரி மாதம் டில்லியில் இஸ்லாமியர் செறிந்து வாழும் பகுதிகளில் கலவரங்கள் மூண்டன. இஸ்லாமியர்களின் வீடுகளும் வணிக மையங்களும் தாக்கப்பட்டன. 53 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகுதியும் இஸ்லாமியர். உயிரிழந்தவர்களில் ஒருவன் ஃபைசன். 23 என்பது சாகும் வயது அல்ல. அவனது தாய் அளித்த நேர்காணல் சமூக ஊடகங்களில் வெளியானது. அவர் பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. எனினும் அவர் பேசியதைப் புரிந்துகொள்ள எந்த மொழியும் தேவையில்லை.

பெருந்தொற்றின் ஆரம்பக் காலத்தில் தப்லீக் ஜமாத் எனும் இஸ்லாமிய அமைப்பு நடத்திய கூட்டம்தான் (டில்லி, மார்ச் 2020) நோய்ப் பரவலுக்குக் காரணம் என்று அரசே குற்றம் சாட்டியது. சமூக ஊடகம் அவதூறுகளால் நிறைந்தது. கொரோனா ஜிகாத் என்றொரு புதிய சொற்றொடர் அகராதியில் ஏறியது. ஆனால் அதைவிடப் பன்மடங்கு மக்கள் கூடிய கும்பமேளா நடத்துவதற்கு அனுமதி நல்கப்பட்டது (ஹரித்துவார், ஏப்ரல் 2021). அந்த விழாவுக்கு அரசின் ஆதரவும் ஊக்குவிப்பும் இருந்தது.

**பொய்யுரைகள்**

இவையெல்லாம் அரசு இயந்திரத்தால் நேரடியாகவோ அல்லது அதன் ஆசீர்வாதத்துடனோ நடத்தப்பட்டவை. இன்னொரு தளத்திலும் இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது. அது பொதுப்புத்தியைத் தொடர்ந்து கறைப்படுத்தி, பிற்பாடு அதைக் கைப்பற்றுவது. இது பெருமளவில் சமூக ஊடகங்கள் வழியாக நடக்கிறது. இங்கே பரப்பப்படும் பொய்களுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. இஸ்லாமியரைக் குறித்து அச்ச உணர்வும் வெறுப்பும் விதைக்கப்படுகின்றன. ஓர் உதாரணம் சொல்கிறேன்.

ஜூலை 2021இல் உத்தரப்பிரதேச அரசு குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்றுக்கான வரைவை வெளியிட்டது. இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ளும் பெற்றோருக்குப் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதைப் பற்றி நான் ஒரு கட்டுரை [ https://www.vikatan.com/social-affairs/women/why-uttarpradesh-s-population-control-bill-may-dangerous-to-women ] எழுதியிருந்தேன். உலகெங்கும் கல்வியும் செல்வமும் மிகுந்த சமூகங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கை தானாகவே குறைகிறது. கட்டாயங்களும் சலுகைகளும் பெண்களுக்கு எதிராகத்தான் திரும்பியிருக்கின்றன. இதுதான் கட்டுரையின் சாரம். உ.பி. அரசின் வரைவறிக்கை விவாதப் பொருளாக இருந்தபோது சமூக ஊடகங்களில் ஒரு பரப்புரை நடந்தது — முஸ்லிம்கள் வகைதொகையின்றி பிள்ளைகளைப் பெறுகிறார்கள். இதைத் தொடர்ந்து அனுமதித்தால் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகி விடுவார்கள். இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள் — இந்த வாதங்களை உ.பி. அரசு முன்வைக்கவில்லை. ஆகவே கட்டுரையில் நான் இந்தக் கோணத்தை விவாதிக்கவில்லை. கட்டுரை வெளியானதும் கணிசமான எதிர்வினைகள் வந்தன. அதில் ஒரு சாரர், ‘இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுப்பதற்கு இப்படியான சட்டங்கள் தேவைதான்’ என்று கூறியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சமூக ஊடகங்களின் இந்தப் பரப்புரை உண்மைக்குப் புறம்பானது.

2021 மக்கள்தொகைக் கணக்கு இன்னும் வெளியாகவில்லை. 2011 கணக்கின்படி இந்துக்களின் எண்ணிக்கை 96.62 கோடி, முஸ்லிம்கள் 17.22 கோடி. 2011இல் இந்துக்களின் எண்ணிக்கை 82.77 கோடியாகவும், 1991இல் 69.01 கோடியாகவும் இருந்தது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 2001இல் 13.82 கோடியாகவும், 1991இல் 10.67 கோடியாகவும் இருந்தது. அதாவது இரண்டு சமூகத்தினரின் மக்கள்தொகையும் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் அதிகரிக்கும் விகிதம் இரண்டு சமூகத்தினருக்கும் குறைந்து வருகிறது. மேலதிகமாக, முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிக்கும் விகிதம் இந்துக்களின் விகிதத்தைவிடக் குறைவாக இருக்கிறது. இதை மக்கள்தொகை ஆய்வாளர்கள் வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி (Decadal Growth Rate) என்கிறார்கள்.


இந்தத் தொடர்பில் இரண்டு புள்ளி விவரங்கள் முக்கியமானவை. முதலாவது, படித்த பெண்கள் குறைவாகப் பிள்ளை பெற்றுக் கொள்கிறார்கள். இதில் மதத்துக்கு பெரிய பங்கெல்லாம் இல்லை. தென்னிந்திய முஸ்லிம் பெண்கள் கங்கைக்கரை மாநிலங்களைச் சேர்ந்த இந்துப் பெண்களைவிடக் குறைவான பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள். இரண்டாவது, இந்தியாவின் 2011 மக்கள்தொகையில் இந்துக்கள் 80% ஆகவும் முஸ்லிம்கள் 14% ஆகவும் இருந்தனர். பியூ (Pew) எனும் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் 2050இல் இந்துக்கள் 77% ஆகவும் முஸ்லிம்கள் 18% ஆகவும் இருப்பார்கள் என்று கணிக்கிறது. அதன் பிறகு முஸ்லிம்களின் சராசரி வயது உயரும், அதனால் பிறக்கும் பிள்ளைகளின் விகிதம் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்து மதத்தினரின் மக்கள்தொகை உலகின் ஐந்து பெரிய இஸ்லாமிய நாடுகளில் (இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா, வங்கதேசம்) வாழும் முஸ்லிம் மதத்தினரின் மக்கள்தொகையைவிட அதிகமாயிருக்கும். முஸ்லிம்கள் இந்தியாவில் பெரும்பான்மையினராக மாறுவதற்குச் சாத்தியமேயில்லை. அது ஒரு பொய்யுரை. அது குரோத முலாம் பூசப்பட்டு சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரப்பப்படுகிறது. அது கங்கைக் கரையில் தொடங்கியது. காவிரிக்கரை வரை வந்துவிட்டது.

இப்போது உடுப்பியில் ஹிஜாப்பைப் பிரச்சினையாக்க முடிகிறது. அடுத்து உடுப்பி மாவட்ட கோயில் திருவிழாக்களில் கடை போட்டு வந்த இஸ்லாமிய வணிகர்களைத் தடை செய்ய முடிகிறது. நூறாண்டு காலத்துக்கும் மேலாக மக்களின் நன்மதிப்போடு நடத்தப்பட்டு வரும் ஒரு பள்ளியின் மீது கட்டாய மத மாற்றம் செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்ட முடிகிறது. முஸ்லிம்கள் சமைக்கும் பிரியாணியைச் சாப்பிட்ட இந்துக்கள் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் முன்னால் வரிசையில் நிற்கிறார்கள் என்று ஒரு பதிவரால் எழுத முடிகிறது. அந்தப் பதிவு ஆயிரம் பேரால் பகிரப்படுகிறது.

**நம்மைச் சுற்றி மதில்**

இந்த இடத்தில் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. கான்ஸ்டன்டைன் காபே எனும் கிரேக்கக் கவி எழுதிய ‘மதில்கள்’. அதன் வரிகளை இப்படி மொழிபெயர்க்கலாம்:

எந்த அக்கறையுமின்றி, கருணையின்றி, நாணமுமின்றி,
அவர்கள் என்னைச் சுற்றி உயரமான மதில் எழுப்பினார்கள்.
நான் இப்போது உள்ளே இருக்கிறேன், நிராசையுடன்.
வெளியே எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.
அவர்கள் இந்த மதிலை எழுப்பியபோது, எப்படி எனக்குத் தெரியாமல் போனது?
கட்டிட ஓசைகள் என் செவியைத் தீண்டாமல் போனது எங்ஙனம்?
மிக மிக மென்மையாகக் காரியமாற்றி அவர்கள் என்னைப் புறவுலகிலிருந்து பிரித்து விட்டார்கள்.

இந்தக் கவிதை 1896இல் எழுதப்பட்டது. இன்றளவும் பொருத்தப்பாட்டுடன் விளங்குகிறது. லக்னோவிலோ, டில்லியிலோ, உடுப்பியிலோ, மைக்கேல்பட்டியிலோ அடுக்கப்படும் ஒவ்வொரு செங்கல்லையும் அதன் ஓசையையும் உணர்ந்தால் மட்டுமே, நம்மைச் சுற்றி ஒரு மதில் எழும்புவதை நாம் உணரமுடியும். அதில் சிறைப்படாமல் தப்புவதற்கு மத வெறுப்புணர்வு பரப்பப்படும் இடங்களில் நாம் எதிர்வினை ஆற்ற வேண்டும்.

கிரிகோரி மீக்ஸ் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து ஒரு தேசத்தின் அரசாட்சியை மதிப்பிட்டுவிடலாம் என்றார். யோசிக்கையில் இதில் அரசுக்கு மட்டுமில்லை குடிமக்களுக்கும் பங்கு இருக்கிறது. சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் ஒரு தேசத்தில் பெரும்பான்மையினருக்கும் பங்கு இருக்கிறது. அவர்கள் அந்த இழிவை முன்னின்று நடத்துபவர்களாகவோ, ஆதரிப்பவர்களாகவோ, மவுனம் சாதிப்பவர்களாகவோ, ஏதோ ஒரு பாத்திரம் வகிக்கிறார்கள். ஆகவே சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து ஒரு தேசத்தின் அரசாட்சியை மட்டுமல்ல, அதன் மனசாட்சியையும் மதிப்பிட்டுவிடலாம்.

(**மு.இராமனாதன்**, எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com)

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.