அதிக விலைக்கு வாங்கியது ஏன்? கேள்வியைத் தொடுக்கும் எதிர்க்கட்சிகள்!

politics

கொரோனா ரேபிட் கருவிகள் தொடர்பாக தமிழக அரசுக்கு தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா சோதனைக்கான ரேபிட் கிட் விலையில் பெருமளவிலான மோசடி நடந்த விஷயம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த வழக்கு ஒன்றில் வெளிவந்திருக்கிறது. ரேபிட் கிட்டின் இறக்குமதி வரி மற்றும் கூடுதல் செலவு உட்பட 245 ரூபாய்தான் என்ற நிலையில், தமிழக அரசு அதனை 600 ரூபாய் என்ற விலைக்கு வாங்கியது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு வாங்கிய 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும், அதில் எஞ்சியுள்ள அனைத்து கொள்முதல் ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ரேபிட் கிட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை என்றும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை நோக்கி கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில், “எடப்பாடி பழனிச்சாமி அரசு, தனியார் முகவாண்மை மூலம் ரூ.245க்கு அல்லது டெல்லி உயர்நீதிமன்றம் கூறியவாறு 400 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட வேண்டிய துரித பரிசோதனைக் கருவிகளை, 600 ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

கொரோனா கொள்ளை நோயால் நாளுக்கு நாள் மக்களின் துயரம் அதிகரித்துக்கொண்டு வரும் சூழலில், அரசுக் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்று கேட்டுள்ள வைகோ, “கொரோனா பேரிடரால் அச்சமும், எதிர்கால வாழ்க்கை குறித்தும் மக்கள் கவலை கொண்டு தவிக்கின்ற நிலையில், ‘எல்லாம் நாங்களே’ என்று முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்” என்ற வினாவை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழ்நாட்டுக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர். வாங்கிய நிறுவனத்திடம் வாங்காமல் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத விநியோகஸ்தரான ஷான் பயோடெக் அண்ட் டயோக்னோஸ்டிக்ஸ் முலம் ஒரு கருவி ரூ. 600 க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.

4 லட்சம் கருவிகளை ரூ. 24 கோடிக்கு வாங்க கொள்முதல் ஒப்பந்தம் போட்டதை அமைச்சரால் மறுக்க முடியுமா? அதில் 50 ஆயிரம் கருவிகளை பெறுவதற்கு முதல்கட்டமாக முயற்சியெடுக்கப்பட்டு 24 ஆயிரம் கருவிகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இதற்கு நேரடியாக பதில் கூறாமல் மற்ற மாநிலங்களின் விலையை ஒப்பிட்டு பேசுவது மடியில் இருக்கிற கனத்தை மூடி மறைப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ள அழகிரி,

“மிக மிக சாதாரண சோதனைக்கருவிகளை உரிய ஆய்வு செய்து தகுதியான நிறுவனத்திடம் தரமான கருவிகளை வாங்க முடியாத பொறுப்பற்ற மத்திய, மாநில அரசுகள் கொடிய கொரோனா நோயிலிருந்து 136 கோடி மக்களை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்கிற கவலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.” என்று விமர்சித்துள்ளார்.

“இத்தகைய கருவிகளைக் கொள்முதல் செய்வதை ஐ சி எம் ஆர் பொறுப்பில் விடாமல் இதற்கென ஒரு குழுவை அமைத்து அந்த குழுவே நேரடியாக அயல்நாடுகளில் இருந்து கருவிகளை தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தங்கள் யாவும் வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்த கருவிகள் திரும்ப அனுப்பப்படுகின்றன. இதற்கான தொகை அளிக்கப்பட மாட்டாது என்று மோடி அரசும் எடப்பாடி அரசும் சொன்னாலும் மிகப் பெரும் இப்பேரிடர் காலத்தில் பாஜக அரசு மீதும் அதிமுக அரசு மீதும் பதிந்துள்ள ஊழல் கறையைப் பல்லாயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளித்துக் கழுவினாலும் ஊழல் கிருமி நீங்காது” என விமர்சித்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *