குண்டுவெடிப்புக்கு மத்தியில் பதவியேற்ற அதிபர்!

Published On:

| By Balaji

ஆப்கன் அதிபர் பதவியேற்பு விழாவின்போது வெடிகுண்டு வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலின் முடிவு கடந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட்டது. அதில், அதிபர் அஷ்ரப் கனி 50.62% சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவுக்கு 39 சதவிகித வாக்குகள் கிடைத்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள அதிபர் மாளிகையில் இன்று (மார்ச் 9) நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபராக அஷ்ரப் கனி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மே கலீல்சாத், நோட்டோ படைகளின் தளபதி ஜெனரல் ஸ்காட் மில்லர் ஆகியோர் கலந்துகொண்டனர். அஷ்ரப் கனியின் வெற்றியை ஏற்க மறுத்த அப்துல்லா அப்துல்லா, அதிபர் மாளிகையில் தானும் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இரு நிகழ்ச்சிகளையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அஷ்ரப் கனி அதிபராக பொறுப்பேற்ற சமயத்தில், மக்கள் குழுமியிருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்தது. இதனால் மேடை உள்ளிட்ட அப்பகுதி சற்று நேரம் அதிர்ந்து அடங்கியது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கூடியிருந்த மக்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறி ஓடினர். வெடிகுண்டு வெடித்த நேரத்தில் பதற்றப்படாத அஷ்ரப் கனி, பொறுமையாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அஷ்ரப் கனி, “நான் குண்டு துளைக்காத உடையை அணியவில்லை. சாதாரண உடையை தான் அணிந்திருக்கிறேன். ஆப்கானிஸ்தானுக்காகவும், எனது மக்களுக்காகவும் தியாகம் செய்ய இந்த நெஞ்சு தயாராக இருக்கிறது” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share