தொழிலதிபர்களின் 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி –  அதிர்ச்சிப் பட்டியல்!  

politics

கொரோனா தடுப்புப் பணிகளுக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பொருளாதார உதவி வேண்டி மத்திய அரசிடம் வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோள்கள் வைத்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான்… நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் வங்கிக் கடன்கள் 68,607 கோடி ரூபாயை மத்திய மோடி அரசு தள்ளுபடி செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சாகேத் கோகலே என்பவர் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி, 2019 செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி ரிட்டர்ன் ஆஃப் – அதாவது கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி கொடுத்திருந்தது. அந்தப் பட்டியலில்தான் நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டு அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாகக் கூறியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதுகுறித்து காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, “நாட்டில் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தாத டாப் 50 பேரை பட்டியலிட்டு வெளியிடுமாறு நாடாளுமன்றத்திலேயே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்டேன். ஆனால், அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்து மௌனமாக இருந்தார். இப்போது ரிசர்வ் வங்கி அளித்துள்ள வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலில் நீரவ் மோடி. மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா என பாஜகவினரின் நண்பர்கள் பெயர்கள் இருக்கின்றன. அதனால்தான் அன்று நாடாளுமன்றத்தில் உண்மையை மறைத்தார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி. அதோடு தனது ட்விட்டர் பக்கத்தில், தான் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டதையும், அதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்காமல் அமர்ந்திருந்த காட்சியையும் வீடியோவாக இணைத்துள்ளார்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “இவர்களின் கடன்கள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும். இது மோடி அரசாங்கத்தின் தவறான முன்னுரிமைகள் மற்றும் நேர்மையற்ற நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது. நாடே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுகிறது, மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். ஆனால் ரூ.68,307 கோடி வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனாவால் நாடு சுமார் ஒரு மாதத்துக்கும் மேல் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்கூட மாநிலங்கள் சார்பில் நிதித் தொகுப்பு கேட்கப்பட்டது. ஆனால், பிரதமர் அதுகுறித்து பதிலளிக்கவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு அனுப்பிய ஃபேக்ஸில்கூட கொரோனாவை எதிர்த்துப் போராட நிதியுதவி கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் பதிலில்லை.

இந்த நிலையில்தான் விரல்விட்டு எண்ணக் கூடிய தொழிலதிபர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கடன் ரிசர்வ் வங்கியால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *