தவறு செய்தால் தோப்புக்கரணம் போடும் பள்ளி மாணவர்கள் போன்று, பாஜகவில் இணைந்த முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர், தோப்புக்கரணம் போட்டு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
தமிழகம் போன்று மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்ற விஷயங்கள் நடக்கிறதோ இல்லையோ, கட்சி தாவல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, முதல்வர் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பலா் பாஜகவுக்கு மாறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி, கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் உள்ளூா் தலைவர் சுஷாந்த் பால் பாஜகவில் இணைந்தார். அண்மையில் மம்தாவின் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி, மிதுனபுரி அருகே பிங்லா பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த கூட்டத்தில் பாஜகவில் இணைந்த சுஷாந்த் பால், பாஜக கொடியைப் பெற்றுக் கொண்டு பேசத் தொடங்கினார்.
இதையடுத்து பேச்சை நிறுத்திவிட்டு அவர் தோப்புக்கரணம் போட்டது அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. எதற்காக இவர் திடீரென இப்படி செய்கிறார் என வியப்பிலிருந்தவர்கள் மத்தியில் பேசிய சுஷாந்த் பால், ” திரிணமூல் காங்கிரஸிலிருந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் செய்த பாவத்தைக் கழிப்பதற்காகத் தோப்புக்கரணம் போடுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது, திரிணமூல் காங்கிரஸ் இருந்ததால் பாவியாக இருந்தேன். அந்த பாவத்தை போக்குவதற்காக இவ்வாறு செய்கிறேன். 2018 உள்ளாட்சித் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் அமைதியாக நடக்கவிடவில்லை. அடக்குமுறையைக் கையாண்டது. அக்கட்சியில் மக்கள் விரோத செயல்கள் அதிகளவு நடைபெறும். தற்போது பாஜகவில் இணைந்ததன் மூலம், அவற்றிலிருந்து விடுபட்டது போல் உணர்கிறேன். இனி அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்” என்று பேசியிருக்கிறார் சுஷாந்த் பால்.
**-பிரியா**
�,