kதனியாக வாழும் பெண்களுக்கு ரேஷன் கார்டு!

Published On:

| By Balaji

கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்று தனியாக வாழும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கணவனால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்றுத் தனியாக வசிக்கும் பெண்களின் பெயர், கணவனின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில் கணவர் அப்பெண்ணின் பெயரை நீக்குவதற்கு முன்வருவதில்லை. அதுபோன்று, நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாத நிலையில், அத்தகைய பெண்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 25) இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு,

ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாகக் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரைச் சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்யப்படும்.

பின்னர் எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினைப் பயன்படுத்தி குடும்பத் தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டை கோரும்போது சட்டப்பூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share