ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்பொருள் விவகாரத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக் குறைவால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து குணமடைந்து வந்த நிலையில், ராம்விலாஸ் பஸ்வான் நேற்றிரவு (அக்டோபர் 8) காலமானார். அவருக்கு வயது 74.
ராம்விலாஸ் பஸ்வான் மறைவை உறுதிப்படுத்திய அவரது மகனும், லோக் ஜனசக்தி தேசிய தலைவருமான சிராக் பஸ்வான், “அப்பா… இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை. ஆனால், நீங்கள் எங்கிருந்தாலும் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன். மிஸ் யூ அப்பா” என்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “நாடு ஒரு தொலைநோக்கமுள்ள தலைவரை இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் பணியாற்றிவராக அவர் இருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த பஸ்வான் அம்மக்களின் மனங்களை வென்றவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
“நம் நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது ஒருபோதும் நிரப்பப்படாது. ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. நான் எனது நண்பரை இழந்துவிட்டேன். ஒவ்வொரு ஏழை மக்களும் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் மிகுந்த ஆர்வம்கொண்டவராக பஸ்வான் இருந்தார்” என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ராம்விலாஸ் பஸ்வான் காலமான செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏழை பட்டியலின மக்கள் அதன் முக்கிய அரசியல் குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சமூகநீதியின் உறுதிமிக்க தூண் ஒன்று இன்று சாய்ந்து விட்டது; அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருந்த உயர்வான குரல் ஓய்ந்து விட்டது. ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்ததற்காக நெருக்கடி நிலைமையின்போது சிறையில் அடைக்கப்பட்டாலும் – நெஞ்சுரத்துடன் முழுக் காலத்தையும் சிறையில் கழித்த தியாக சீலர்.
அவர் விரைவில் வீடு திரும்பி – சமூகநீதிக்காகவும் – அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக் குரலாகவும் விளங்கி, தொடர்ந்து முன்னெப்போதும் போல் பாடுபடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் – அவர் மறைந்தார் என்று வந்த செய்தி பேரிடியாக என் இதயத்தைத் தாக்கியிருக்கிறது” என்று இரங்கல் தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்று, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பஸ்வான் பேசினார். தனித் தமிழ் ஈழமே தீர்வு என்றும் கூறினார். சென்னை மெரினா கடற்கரையில் மே-17 இயக்கம் நடத்திய ஈழத்தமிழர்கள் புகழஞ்சலி நிகழ்ச்சியில் நான் அழைத்ததன்பேரில் வந்து கலந்துகொண்டார் என்று நினைவுகூர்ந்த வைகோ, “சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஆகிய உன்னத லட்சியங்களுக்காகவே வாழ்ந்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுக்கு அரிய சேவை செய்ய வேண்டிய அந்த உத்தமர் மறைந்த செய்தி மனதை வாள் கொண்டு பிளக்கிறது” என்று இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், “பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். பிகாரில் தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக திகழ்ந்தவர். 1990ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்” என புகழாரம் சூட்டினார்.
விசிக தலைவர் திருமாவளவன், “ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரையிலும் பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு அவரே முக்கியமான காரணியாக இருந்தார். அம்பேத்கருக்குப் பிறகு இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அறிமுகமானவராகவும் அவர்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்ற தலைவராகவும் அவர் திகழ்ந்தார். பாஜக அரசை கடுமையாக விமர்சித்த போதிலும் விடுதலைச்சிறுத்தைகள் மீது எந்நாளும் அன்பு கொண்டவராக அரவணைப்பவராகத் திகழ்ந்த தலைவர் அவர். அவரது இழப்பு சமூகநீதி அரசியலுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்” என இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.
**எழில்**�,