அமைச்சர் கே .என் .நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிப்ரவரி 9 உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 மார்ச் 29ஆம் தேதி திருச்சியில் இருந்த தன் வீட்டிலிருந்து காலை வாக்கிங் சென்ற ராமஜெயம் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கடந்த பத்து வருடங்களாக தமிழக போலீசாரும் அதன்பிறகு சிபிஐயும் விசாரணை நடத்தி எந்தத் துப்பும் துலங்கவில்லை.
இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை தமிழக போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுபற்றி தமிழக டிஜிபி இடம் தான் கொடுத்திருக்கும் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது… பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டதை ரவிச்சந்திரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய உகந்த காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தருமாறு ஏற்கனவே உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. அதன்படியே தமிழக அரசும் சில போலீஸ் அதிகாரிகள் பட்டியலை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.
இந்த விவகாரம் பற்றி பிப்ரவரி 4-ஆம் தேதி ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு விசாரணை அதிகாரி இவர்தான் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “தற்போது சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஷகில் அக்தரிடம் இந்த விசாரணை பொறுப்பை அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன”என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐக்கு உதவ தமிழக சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி பாரதிதாசன் அளித்த உத்தரவில்….”ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடந்த போதிலும் கொலைக்கான நோக்கம் கூட இதுவரை கண்டறியப்படவில்லை. நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் ஓரளவு விவரங்கள் இருந்தாலும் முழுமையான விவரங்கள் இல்லை.
எனவே இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்.
தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். இந்த விசாரணை முடியும் வரை ரவிக்கு வேறு பணிகள் எதுவும் தரக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறை விசாரணையின் நிலையை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்று நீதிபதி பாரதிதாசன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
**வேந்தன்**