இந்தியா காணாத போராட்டம்: பாமகவினருக்கு ராமதாஸ் அழைப்பு!

politics

அடுத்தகட்ட போராட்டத்துக்கு பாமகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராமதாஸ்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முற்றுகை போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் போராட்டம், பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என இதுவரை மூன்று வடிவங்களில் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதனிடையே அமைச்சர்கள் கூட்டணி தொடர்பாகப் பேச தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றபோது, டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும் இணையவழி பொதுக்குழுவுக்குப் பிறகுதான் எதையும் முடிவு செய்வோம் என அவர்களிடம் தெரிவித்து அனுப்பியிருக்கிறார் ராமதாஸ். இதனிடையே அரசுக்கு எதிரான நான்காவதுகட்ட போராட்டத்துக்குத் தயாராகி வருகிறது பாமக.

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய மடலில், அடுத்தகட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அரசுக்கு மனு கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் போராடிக்கொண்டிருக்க முடியும்? இந்த நிலை இப்படியே நீடிப்பதை அனுமதிக்க முடியாது; சகித்துக்கொள்ள முடியாது. நமது நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக நமது போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாம் ஓயப்போவதில்லை என்று கூறிய அவர்,

வரும் 30ஆம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்களைவிட இந்தப் போராட்டம் நமது முழுமையான வலிமையைக் காட்டும் வகையில் அமைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் 50 இருசக்கர ஊர்திகள் மற்றும் 100 இளைஞர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு 6 கிராமங்கள் முதல் 15 கிராமங்கள் வரை பயணம் செய்ய வேண்டும். 30ஆம் தேதி போராட்டத்துக்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான இந்தப் பரப்புரை உடனடியாகத் தொடங்கப்பட்டு மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இறுதிக்கட்டப் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன் இது போன்றதொரு பிரமாண்டமான போராட்டம் இதுவரை நடத்தப்பட்டதில்லை என்று போற்றும் அளவுக்கு 30ஆம் தேதி மக்கள்திரள் போராட்டம் அமைவதை அனைத்து நிலை நிர்வாகிகளும் உறுதி செய்ய வேண்டும். நமது போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு முன்னோட்டமாக நமது இளைஞர்கள் நடத்தவுள்ள இருசக்கர ஊர்தி பரப்புரை பயணம் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *