இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தன்னுடன் விவாதம் நடத்தத் தயாரா என்று ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடந்தபோது, அதற்கு ஆதரவாக அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்காத இந்த மசோதாவை அதிமுகவும், பாமகவும் ஆதரித்து துரோகம் இழைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களுக்கு பாமக துரோகமிழைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (டிசம்பர் 18) அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், “ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை அல்ல. அவர்களின் கோரிக்கை இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அல்லது இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்வதற்கான இரட்டைக் குடியுரிமை தான்.
2009ஆம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்த கலைஞர், அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றச் செய்தார். அதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் கலைஞர் எழுதினார். ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்ற முழக்கத்தை திமுக கைவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென காங்கிரஸுக்கு திமுக அழுத்தம் தராதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய ராமதாஸ், “ஈழத்தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “திமுகவைப் பொருத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை. செய்யப் போவதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது” என்று குறிப்பிட்டவர்,
“ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த போதெல்லாம் துரும்பைக் கூட அசைக்காதது தான் திமுக. பல நேரங்களில் தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சிய இயக்கம் தான் அது. ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்…. மு.க.ஸ்டாலின் தயாரா?” என்று சவால் விடுத்துள்ளார்.
**திமுகவைக் கண்டித்து போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்**
சென்னை தி.நகரில் அமைந்துள்ள தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது. பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக. இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக இலங்கைத் தமிழர்களை பயன்படுத்துகின்றனர்” என்று சாடினார்.
மேலும், “இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரம் தொடர்பாக கருத்துக் கூற பாஜக உட்பட எந்த கட்சிக்கும் உரிமை கிடையாது. அந்த முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும். மாணவர்கள் திமுகவின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் அப்பா, தாத்தாவை ஏமாற்றியவர்கள் உங்களையும் ஏமாற்ற நினைக்கிறார்கள். குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுகவின் பகல் வேஷம், நீலிக் கண்ணீரை கண்டித்து வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.
�,