வாசனுக்கு அளித்தது அரசியல் சாணக்கியத்தனம்: செல்லூர் ராஜு

Published On:

| By Balaji

ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான வேட்பாளரை அதிமுக நேற்று அறிவித்தது. அதன்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரோடு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார். தேமுதிக தொடர்ச்சியாக பலவகைகளில் வலியுறுத்திவந்த நிலையில், ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா பதவி அளிக்கப்பட்டது தேமுதிகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதுரை சொக்கலிங்கபுரத்தில் இன்று (மார்ச் 10) சாலை அமைக்கும் பணியினை தொடங்கிவைத்த பிறகு இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி ராஜ்யசபாவுக்கு ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கலாம். இவையெல்லாம் அரசியல் சாணக்கியத்தனம். இதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது. தற்போது அளித்துள்ள வாய்ப்பு தமாகாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்தமுறை வாய்ப்பு வரும்போது தலைவர்கள் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

அதுபோலவே கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “பாமகவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. வேறு எந்த கட்சியுடனும் ராஜ்யசபா சீட் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. முதல்வரும், துணை முதல்வரும்தான் மாநிலங்களவை வேட்பாளரை தேர்வு செய்தனர். இதில் வேறு எந்தக் குழப்பமும் இல்லை. தேமுதிக அதிருப்தியிலும் இல்லை. அப்படிப்பட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் கட்சித் தலைமை அழைத்துப் பேசிக்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share