அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களாக மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர். மற்றொரு இடம் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை இன்று (மார்ச் 9) வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மூவரும் தனித்தனியாக நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மத்தியில் பணியாற்றுவதற்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு காலகட்டங்களில் எனக்கு வாய்ப்பளித்தார்கள். அந்தப் பணியை தொடருவதற்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் வாய்ப்பளித்துள்ளனர். கட்சி இடும் கட்டளையை ஏற்று தமிழகத்தின் நலன்களை காக்கும் வகையில் பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்த கே.பி.முனுசாமி, “அதிமுக தலைமை இடும் ஆணைப்படி என்னுடைய குரல் மாநிலங்களவையில் ஒலிக்கும். மக்களுக்கு துன்பம் தரும் சட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்” என்று தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமாகா தலைவர் வாசன், “எங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாய்ப்பு அளித்தமைக்கு ஏற்ப, நான் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதுணையாக செயல்படுவேன். இந்த வாய்ப்பினை தமாகா முழுமையாகப் பயன்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
**எழில்**�,