தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அக்கட்சி பொருளாளர் பிரேமலதா தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்திருந்தார். தேமுதிகவைப் பொறுத்தவரைக் கூட்டணி தர்மம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உறுதியாக முதல்வரும் கூட்டணி தர்மத்தோடு மாநிலங்களவை எம்.பி.இடத்தை தருவார் என்று நினைக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி முக்கொம்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போது முதல்வரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த முதல்வர், எம்.பி பதவியை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் தான் முடிவு செய்யும். அதிமுகவிலேயே பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதையும் பார்க்க வேண்டும் என்றார்.
**-கவிபிரியா**�,