தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், இன்று (மார்ச் 1) அக்கட்சியின் கொடி நாளை முன்னிட்டு சென்னையில் சில இடங்களில் கட்சிக் கொடியேற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் குறித்தும் பேசியிருக்கிறார்.
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா தருவது என்று அதிமுகவுடன் மக்களவை கூட்டணி வைத்தபோது ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த விவகாரம் பற்றி தலைமை முடிவெடுக்கும்’ என்று நழுவலாக பதில் சொன்னார்.
ஆனால் அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 29 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பாமகவுடன் போடப்பட்டது போல தேமுதிகவுடன் மாநிலங்களவை சீட் பற்றிய எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை” என்று குறிப்பிட்டார். அதிமுகவின் தலைமையுடைய நிலைப்பாடுகளை பொதுவாக அமைச்சர் ஜெயக்குமார்தான் அறிவித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயக்குமாரின் கருத்துகளின் படி பார்த்தால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் இல்லை என்பதே அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது.
அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு தேமுதிக தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ பதிலும் இல்லாத நிலையில்தான் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன்,
“ஏற்கனவே எங்கள் பொருளாளரும் அம்மாவுமான பிரேமலதா ராஜ்யசபா சீட் பற்றி பேசப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பதிலாக முதல்வர் எடப்பாடியும் தலைமை முடிவெடுக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறார். நாங்கள் கேட்க வேண்டியது எங்கள் கடமை கேட்டுவிட்டோம். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார் விஜய பிரபாகரன்.
ரஜினியும் கமலும் இணைந்து கூட்டணி அமைப்பார்களா என்ற கேள்விக்கு, “அவர்கள் இருவரும் இணைந்து நடிகர் சங்க தேர்தலைக் கூட சந்தித்தது இல்லை. அவர்கள் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார் விஜயபிரபாகரன்.
விஜயகாந்த் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத குறையை விஜய பிரபாகரன் போக்கி வருகிறார் என்று அவரைக் கொண்டாடி வருகிறார்கள் தேமுதிகவினர். அதேபோல, “நம் ஆட்சி விரைவில் மலரும், தொய்வில்லாமல் உழையுங்கள்” என்று பிரபாகரனும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார்.
**வேந்தன்**�,