நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், ரன்தீப் சுர்ஜேவாலா வெற்றி!

Published On:

| By admin

16 மாநிலங்களவை இடங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதில் தமிழகத்திலிருந்து ஆறு எம்பிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் சிவி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதுபோன்று 11 மாநிலங்களிலிருந்து 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதமுள்ள கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 4 இடங்களில் பாஜக சார்பில், மூன்று பேர் வெற்றி பெற்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் சிரோயா, மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜெயராம் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மகாராஷ்டிராவில் உள்ள 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அனில் பாண்டே, தனஞ்சய் மகாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப்காரி , என்சிபி சார்பில் பிரபுல் படேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் வெற்றி பெற்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தில் பாஜகவும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் முகுல் வாசினிக், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஹரியானாவில் பாஜக வேட்பாளர் கிஷன்லால் பன்வார் மற்றும் பாஜக-ஜே.ஜே.பி. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா ஆகியோர் வெற்றி பெற்றனர். இங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கனுக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share