நடிகர் ரஜினிகாந்த் பற்றிய விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அவருக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதேபோன்ற உத்தரவை முதல்வர் எடப்பாடி அமைச்சர்களுக்கும் பிறப்பித்தார். ஆனால் அமைச்சர்கள் யாரும் எடப்பாடியின் உத்தரவை பின்பற்றவில்லை என்பதற்கு அவர்களின் பேட்டிகளே வரிசைகட்டி ஆதாரங்களாய் நிற்கின்றன.
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பேசியபோது ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
“ வரக் கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் கூட்டணி எப்படி இருக்கும் என்பது யாரும் கணிக்க முடியாத மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. சசிகலா சிறையை விட்டு வருவாரா, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து வருவாரா என்ற இரண்டு கேள்விகளை மையமாக வைத்துதான் சட்டமன்றத் தேர்தலின் கூட்டணிக் கணக்குகள் அமையும். இந்த இருவரையும் மத்திய அரசில் தனக்கிருக்கும் அசுர பலத்தைப் பயன்படுத்தி பாஜக எப்படிக் கையாளும் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அவரை மையமாக வைத்து ஒரு மெகா கூட்டணி உருவாகும் பட்சத்தில், அவர் அடுத்து ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ அவரை ஆதரித்தால் பாஜவின் அக்னிப் பார்வையில் இருந்து தப்பலாம் என்று அமைச்சர்களில் சிலர் கணக்குப் போடுகிறார்கள். சில அமைச்சர்கள் இயல்பாகவே ரஜினியிடம் துண்டு போட்டு வைக்க முயற்சிக்கிறார்கள்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல திமுகவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். அதேநேரம் ரஜினியை அதிகபட்சமாக ஆதரிக்கும் அமைச்சர ராஜேந்திரபாலாஜிதான் . இதேபோல மாஃபா பாண்டியராஜன் துக்ளக் சர்ச்சையின்போதே ரஜினியை ஆதரித்துப் பேசியிருக்கிறார். ரஜினியின் பல்வேறு நண்பர்களோடும் நல்ல தொடர்பில் இருக்கிறார் மாஃபா.
இந்த அமைச்சர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் சேர்ந்திருக்கிறார். ‘மதுரை பல்வேறு மன்னர்கள் ஆண்ட இடம். பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. அதன் அடிப்படையில் ரஜினிகாந்த் மதுரையில் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் கூட அவரின் ராசி எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்’ என்று பேசியிருக்கிறார் உதயகுமார்.
ரஜினிக்கு ஆதரவாகப் பேசும் இந்த அமைச்சர்களை எல்லாம் ஒரு இழை ஒன்றாய் பிணைத்திருக்கிறது. அந்த இழை என்னவென்றால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பதுதான். தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவு அமைச்சர்கள் ஒரே தொனியில் ஒரே குரலில் பேசி வருவது எடப்பாடிக்கு கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவரும் தனது வட்டத்தில் ஆலோசித்து வருகிறார்” என்கிறார்கள்.
�,