ராஜன் குறை
ரஜினி காந்தின் பத்திரிகையாளருக்கான அறிக்கைக்கு பிறகு அவர் மனதை புரிந்துகொள்வது, அவர் அரசியலுக்கு வருவேன் என்கிறாரா, வரமாட்டேன் என்கிறாரா என்பது போன்ற பல விவாதங்கள் வழக்கம்போல நடைபெறுகின்றன. ஆனால் முக்கியமாக கவனிக்கவேண்டியது அவர் மனமறிந்து சொல்லும் மூன்று பொய்கள். இவ்வாறான பொய்களை பேசுபவர்களை எப்படி கண்டிக்க வேண்டுமோ, விமர்சிக்க வேண்டுமோ அவ்விதம் அவர் இந்த விவாதங்களில் கண்டிக்கப்படுவதில்லை.
அவர் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பல விபரீதமான, ஆபத்தான பொய்களை சொல்கிறார், பொய்யர் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். பெரியார் வார்த்தையில் சொன்னால் “யோக்கியமற்றவர்”. அதைப் புரிந்துகொள்ள மூன்று பொய்களையும் விவாதிப்போம்.
**
வெற்றிடமும், திராவிட கட்சிகளுக்கான மாற்றும்
**
ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சி சொல்வது போலவோ அல்லது வேறு சில இயக்கங்கள் கூறுவது போலவோ திராவிட கட்சிகளான தி.மு.க, அ.இ.அ.தி.மு.க நாட்டை சீரழித்து விட்டன, கழகமில்லா தமிழகம் என்றெல்லாம் சொல்வதில்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் சிறந்த ஆளுமைகள், மிகப்பெரிய தலைவர்கள் என்றுதான் சொல்கிறார். குறிப்பாக, அண்ணா எத்தனையோ தலைவர்களை உருவாக்கியவர் என்றுதான் கூறுகிறார். இன்னும் பெரியாரை மட்டும்தான் அவர் வாயாரப் புகழவில்லை. அதையும் எங்காவது செய்திருக்கலாம். நேற்றைய சந்திப்பில் கூறவில்லை. ஆனால் சிஸ்டம் சரியில்லை என்று மட்டும் பொதுவாக கூறுகிறார்.
இப்போது ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்திருப்பதாக சொல்கிறார். எதற்கு? இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக “நல்லவர்களின்” நல்லாட்சியை உருவாக்கிட அரிய சந்தர்ப்பம் என்கிறார். அவருக்கும் 71 வயது ஆகிவிட்டதால் இதுவே கடைசி சந்தர்ப்பம் என்கிறார். இப்போது அரசியலையும், ஆட்சியையும் மாற்றாவிட்டால் பின் எப்போதுமே முடியாது என்கிறார்.
அது என்ன அரிய சந்தர்ப்பம்? கலைஞர், ஜெயலலிதா என்ற இரண்டு பெரிய ஆளுமைகள் இப்போது இல்லையாம். அதுதான் அரிய சந்தர்ப்பம் என்கிறார். இந்த கட்சிகளுக்காக ஓட்டுப் போட்டவர்கள் 30% கட்சிக்காகவும், 70% இந்த இரு தலைவர்களுக்காகவும்தான் ஓட்டுப் போட்டார்கள் என்கிறார். இப்போது அந்த தலைவர்கள் இறந்துவிட்டதால் அந்த 70% ஓட்டுகள் வெற்றிடத்தில் அலைகின்றன என்கிறார்.
இரண்டு விதங்களில் இது அவர் மனமறிந்து சொல்லும் பொய். எப்படியென்று புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில், ஒரு தலைவர் இறந்துவிட்டால் அவருடைய அபிமானிகள், தொண்டர்கள் அவருடைய கட்சிக்குத்தான் தொடர்ந்து வாக்களிப்பார்கள். இந்திரா காந்தியை தலைவராக கருதியவர்கள் எல்லாம் 1984 தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு பெருவாரியாக வாக்களித்தார்கள். இந்திரா காந்தி இறந்துபோய்விட்டாரே, வெற்றிடம் ஆகிவிட்டதே என்று அமிதாப் பச்சனை கட்சி தொடங்கச்சொல்லி வாக்களிக்கவில்லை. இன்றைக்கும் இந்தியாவின் பல பகுதிகளில் நேரு, இந்திரா கால அபிமானிகள் காங்கிரசுக்கு வாக்களிக்கிறார்கள். தமிழகத்தில் காமராஜ் நினைவால் வாக்களிக்கிறார்கள். அவர் நினைவை கொண்டாடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எல்லாம் ஒரு சிறிய வாரிசுப் போட்டி குழப்பத்திற்கு பிறகு ஜெயலலிதா பின்னால் அணிதிரண்டார்கள். தொண்டர்களும் சரி, வாக்காளர்களும் சரி தாங்கள் கொண்டாடும் தலைவர்கள் இறந்தவுடன் அந்த கட்சியையே மறந்துவிட்டு யாராவது சிஸ்டம் ரிப்பேர்காரர்கள் வருவார்களா என்று பார்க்க மாட்டார்கள்.
இரண்டாவதாக, இந்த பொதுவான நியதி, தலைவர்கள் மறைவுக்குப் பின்னால் அவர்கள் ஆதரவாளர்கள் அவர்கள் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பார்கள் என்பது தமிழகத்தில் ஐயத்திற்கு அப்பால் நிரூபணமாகிவிட்டது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின் நிகழ்ந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளே ஆகப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுள்ளன. அந்த இரண்டு தலைவர்களின் மறைவு எந்த வெற்றிடத்தையும் உருவாக்கியதாக இந்த தேர்தல்கள் காட்டவில்லை. அதுவும் பாராளுமன்ற தேர்தலில் மத்திய, மாநில ஆளும் கட்சிகளை எதிர்த்து தி.மு.க, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பெற்ற பெரும் வெற்றி, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவு தளம் எங்கும் காணாமல் போய்விடவில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளது. ஸ்டாலினை பிடிக்காதவர்கள் கூட தி.மு.க வாக்குகள் சிதறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே போலத்தான் அ.இ.அ.தி.மு.க இடைத்தேர்தல் வெற்றிகளும் அவர்களால் தொடர்ந்து வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
இந்த உண்மைகளை நன்கறிந்த ரஜினிகாந்த் வேண்டுமென்றே இந்த பொய்யான ஒரு கருத்தை வெளியிடுவது அவரை நேர்மையான மனிதராக காட்டவில்லை. அவருக்கு மாற்று அரசியல் உருவாக்க வேண்டுமென்றால் வெற்றிடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புரட்சி வேண்டும் என்று கூறுவதுதானே முறையானது. அதைத்தான் இரண்டு “அசுர சக்திகள்” என்று வர்ணிக்கிறார். அசுரர்களை வதம் செய்து தேவர்களின் பார்ப்பனீய ஆட்சியை உருவாக்க பிறந்த அவதாரம் என தன்னை நினைக்கிறார். பிறகு ஏன் “கருணாநிதி, ஜெயலலிதாவிற்குப் பிறகு வெற்றிடம்” என்ற ஒரு சந்தர்ப்பவாத கற்பனையை கூறவேண்டும் என்பதே கேள்வி.
**
தமிழகத்தில் துவங்கும் மாற்றம் தேசமெங்கும் பரவ வேண்டும்
**
தேசிய அரசியலில் ரஜினிகாந்திற்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை. அவர்தான் மோடியையும், அமித்ஷாவையும் வானளாவப் புகழ்கிறாரே? உள்ளபடியே நாடு முழுவதும் சிஸ்டம் சரியில்லையா? சிஸ்டத்தை மோடி, அமித்ஷா சரி செய்யவில்லையா? நாடே பொருளாதார சீரழிவிலும், வங்கி ஊழல்களிலும், அரசியல் ரீதியாக பிளவுண்டும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையிலும் சிக்கித் தவிக்கிறதே, அது குறித்து ரஜினி என்ன சொல்கிறார்?
ஒரே ஒரு வரி சொல்கிறார். முத்தலாக், ராமர் கோயில் தீர்ப்பு, என்.ஆர்.சி, சி.ஏ.ஏ என்று வரிசையாக பல நிகழ்வுகள் ஏற்பட்டதால்தான் இஸ்லாமிய சமூகம் பொங்கி எழுந்துவிட்டது என்கிறார். ஆஹா, எவ்வளவு ஆபத்தான மனிதர் இவர்!
இஸ்லாமிய சமூகம் பொங்கி எழுந்தது என்று வைத்துக்கொண்டாலும் நாடெங்கும் காந்திய வழியில் அறப்போர் நடத்துகிறது. அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது, வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விடுவது ஆகியவற்றை செய்வது பாரதிய ஜனதா கட்சி, இந்துத்துவ அமைப்புகள். கடந்த மாதம் நிகழ்ந்த டெல்லி இஸ்லாமியர் படுகொலையை குறித்து ஏராளமான சாட்சியங்களும், அறிக்கைகளும் இணையத்தில் நிறைந்துள்ளன. அதெல்லாம் தெரிந்தேதான் மனமறிந்து ஒரு பச்சைப் பொய்யை, இஸ்லாமியர்கள் பொங்கி எழுந்தார்கள், அதனால் கலவரம் என்ற மாபெரும் பொய்யை மனமார கூறுகிறார். இவர் ஆபத்தான மனிதரா, அப்பாவியான கோமாளியா என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும்.
சரி, அவர் அரசியல் பேசமாட்டார். ஊழல் இல்லாத ஆட்சிதான் அவர் சொல்லும் சிஸ்டம் மாற்றம் என்று வைத்துக்கொள்வோம். ரஃபேல் ஊழல் குறித்து ஹிந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் புத்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரே? அவரை ரஜினிகாந்த் நம்பவில்லையா? சோ ராமசாமியும், குருமூர்த்தியும் மட்டும்தான் உண்மையான பத்திரிகையாளர்களா? வங்கிகளின் வாராக் கடன் பெருகியது எப்படி என்று அவர் நண்பர் சிதம்பரம் கேட்கிறாரே? அவரையும் ரஜினி நம்பவில்லையா?
தேசிய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, அவர் சொந்த மாநிலமான கர்நாடகா, அவர் நன்கறிந்த மாநிலம்தான். அங்கே அடிக்கடி செல்வார். பெரிய சொத்துக்கள் அந்த மாநிலத்தில் அவருக்கு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சில வீடுகள் உள்ளன என்பதை அவர் ஆதரவாளர்களே கூறுகிறார்கள். கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைவர் எடியூரப்பா எப்படிப்பட்டவர், அவர் ஊழல் வழக்கில் கைதானவர், பாஜகவாலேயே கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் என்பதெல்லாம் அவருக்கு தெரியும். சுரங்க தொழில் ரெட்டி சகோதரர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் தெரியும். சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை அப்பட்டமாக, பகிரங்கமாக பேரம் பேசி விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார் என்பதும் தெரியும். இது போன்ற அரசியல் செயல்பாடுகள் தவறானவை என்று ஒரு வார்த்தை எடியூரப்பாவை கண்டித்து ரஜினியால் பேச முடியுமா?.
எடியூரப்பா, ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற கொள்கை கொண்ட பாரதிய ஜனதாவில்தான் இருக்கிறார். கட்சியே அவரை வெளியேற்றியது. பின்னர் மீண்டும் சேர்த்துக் கொண்டது. ஏன் என்று கேட்கிறாரா ரஜினிகாந்த்? பிறகு எப்படி இந்தியா முழுவதும் சிஸ்டம் சரியாகும்?
இந்தியா முழுவதும் அவர் தமிழகத்தில் நிகழ விரும்பும் “புரட்சி” பரவ வேண்டும் என்று ரஜினி பேசுவதற்குக் காரணம் அவர் பாரதிய ஜனதா கட்சி ஆதரவில் இயங்கவில்லை என்று காட்டிக் கொள்ளத்தான். இது ஒரு போலி நாடகம் என்பதை அவரது செயல்பாடுகளை, அவரது ஆலோசகர்கள் யார் என்பதை கவனிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலை, தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுப்பது. அதை செய்ய அவர் பாரதிய ஜனதா ஆதரவாளர் என்ற பிம்பத்திலிருந்து விலகி வர வேண்டும். அதற்காகத்தான் இந்த அகில இந்திய சிஸ்டம் ரிப்பேர் பற்றிய பேச்சு. மேலும் முத்தலாக், ராமர் கோயில் என்று பல அம்சங்களில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் நெருக்கடிக்கு உள்ளானதுதான் சி.ஏ.ஏ விற்கு எதிரான போராட்டம். வன்முறை என்று அயோக்கியத்தனமான ஒரு திடீர் விளக்கத்தை கொடுத்ததும் இதே காரணத்திற்காகத்தான் எனலாம். இப்படி சொல்லிவிட்டால் இவரது சி.ஏ.ஏ ஆதரவு என்ற முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிடலாம்.
பாரதிய ஜனதா கட்சிதான் இவரை இயக்குகிறது என்பதில் ஐயம் இருக்க முடியாது. ஆனால் இவர் தனித்து இயங்குவதாக காட்டிக் கொண்டால்தான் திராவிட முன்னேற்ற கழக ஓட்டை பிரிக்க முடியும் என்ற கனவு அவரை வழிநடத்துகிறது. தமிழகத்தில் ஒரு முற்போக்கு+பார்ப்பனீய பொதுப்புத்தி எளிய மக்களிடையேயும் உண்டு. அது தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகள் ஊழல் செய்பவை. வர்க்க அரசியலுக்கு எதிரானவை, வாரிசு அரசியல் செய்பவை என்று. ரஜினி பாரதிய ஜனதா கட்சி ஆதரவில் இயங்கவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நல கூட்டணி அறிவித்தது போல, ரஜினிகாந்த்தை ஆதரிக்கவும் இத்தகைய மனப்போக்கு கொண்டவர்கள் தயங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த புதிய நாடகத்தை ரஜினி தொடங்குகிறாரா என்பதையும் பரிசீலிக்கத் தேவையிருக்கிறது.
அப்படி நேர்மையாளர்கள்தான் ரஜினியின் தேவை என்றால் அவர் எண்ணற்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்களையும், தொழிற்சங்க தலைவர்களையும், எளிய வாழ்க்கை வாழும் அரசியல் தலைவர்களையும், ஏராளமான அறிவி ஜீவிகள், கல்வியாளர்கள் ஆதரவையும், ஆட்சி வேறு கட்சி வேறு என்ற பொலிட்பூரோ அமைப்பையும் கொண்ட கம்யூனிஸ்டு கட்சிகளை ஆதரிக்கலாமே? அப்படி என்ன பிரச்சினை அவருக்கு பினராயி விஜயனுடனும், நல்லக்கண்ணுவுடனும், முத்தரசனுடனும்?
**
கட்சியையும், ஆட்சியையும் கடந்த தனிநபர் அதிகாரக்குவிப்பு “பாலமா”?
**
ரஜினிகாந்த் முதல்வராக மாட்டேன் என்று சொல்வதும், அதை தியாகம் என்று பார்க்கவேண்டாம் என்று சொல்வதும் நேர்மையான செயல்பாடுகள் போலத் தோன்றினாலும் அவர், தான் எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்ளாமல், தன்னிடம் அனைத்து அதிகாரங்களையும் குவித்துக் கொள்வதைத்தான் அப்படியெல்லாம் சொல்கிறார். அதனால் நல்லாட்சி அமைய நான் ஒரு “பாலம்” என்று சொல்வது பச்சைப் பொய். நல்லாட்சியே அவர்தான். அவர் மட்டும்தான் கட்சி, ஆட்சி எல்லாம்.
முதலில் அவர் கட்சி அமைப்பை உருவாக்க மாட்டார் , உட்கட்சி தேர்தல்களை நடத்த மாட்டார் என்பதுதான் அவர் பேச்சில் வெளிப்படுகிறது. தேர்தல் திருவிழாவில் சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் தேவைப்படுபவர்கள்தான் கட்சி நிர்வாகிகள், அதன் பிறகு அவர்களுக்கு வேலையில்லை என்ற பார்வை கட்சி என்பது அடிமட்டத்திலிருந்து கிளைகள், வட்டங்கள், மாவட்டங்கள் என்று உட்கட்சி ஜனநாயகத்துடன் உருவாகாது என்பதை தெளிவுபடுத்துகிறது. தலைவர் சொல்வதை தொண்டர்கள் பின்பற்ற வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது என்பதையும் தெளிவு படுத்தினார்.
அடுத்து, தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கும் நபர்கள், இளைஞர்கள், பெண்கள், நல்லவர்கள், வல்லவர்கள் போட்டியிடுவார்கள். அவர்களில் ஒருவர் முதல்வராவார்; அதையும் ரஜினியே தேர்ந்தெடுப்பார் என்று யூகிக்கலாம். அந்த முதலமைச்சரின் வேலை “செயல்படுத்துவது” மட்டும்தான். அதாவது சொன்னதை செய்வது. அவர் என்ன செய்யவேண்டும் என யார் சொல்வார்கள் என்றால் கட்சி உருவாக்கும் வல்லுனர்கள் குழு சொல்லும். (குருமூர்த்தி, துக்ளக் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், லதா ரஜினிகாந்த் ஆகியவர்கள்தான் வல்லுனர்களா என்று சொல்லமுடியாது. இவர்கள் பரிந்துரைப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்). இந்த வல்லுனர்கள் சொல்வதை செயல்படுத்தும் சி.இ.ஓ தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தலைவரான முதல்வர். அவர் அப்படி செய்யவில்லையென்றால் அவரை தூக்கியெறிந்துவிடுவார் ரஜினி.
ஆக, கட்சி அமைப்பிலும் தேர்தல் கிடையாது, பொதுத்தேர்தலில் வெல்பவர்களும் அரசு அதிகாரிகளுடன் பணியாற்றும் தற்காலிக அதிகாரிகள்தான். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ரஜினி நியமிக்கும் வல்லுனர் குழு தீர்மானிக்கும். ரஜினி மேற்பார்வை பார்ப்பார். தேவைப்பட்டால் தூக்கியெறிவார். அவரே சிஸ்டம்; அவரே மக்கள்.
தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்ற மிகப்பரவலான மக்கள் பங்கேற்பைக் கொண்ட, ஒவ்வொரு கிராமத்திலும் கட்சி உறுப்பினர்களை, அவர்களுக்கென ஒரு செயலாற்றலைக் கொண்ட இரண்டு கட்சிகளையும் மக்கள் தூக்கியெறிந்துவிட்டு ரஜினிகாந்த் என்ற 71 வயது நடிகரே கதி என்று போவதற்கு என்ன காரணங்களை ரஜினிகாந்த் கூறுகிறார் என்பதுதான் கேள்வி.
தன்னுடைய இந்த சர்வாதிகார நோக்கைத்தான், நானே மாற்று, நானே சிஸ்டம் என்ற நோக்கைத்தான் பச்சைப் பொய்யாக, வடிகட்டன பொய்யாக, ஆட்சி மாற்றத்திற்கு நான் ஒரு பாலம் என்கிறார்.
ரஜினிகாந்த் நூற்றாண்டுக்கால திராவிட அரசியலை, அது சாதித்த மாபெரும் மக்களாட்சி புரட்சியை, பொருளாதார வளர்ச்சியை, வாழ்க்கைத் தர உயர்வை கேவலப்படுத்துகிறார்.
சொந்த அறிவும், சுயபுத்தியும் இல்லாமல் முருகதாஸ் போன்ற கதைத்திருட்டு இயக்குனர் எடுக்கும் தர்பார் போன்ற குப்பை படத்தில் நடித்து ஐம்பது கோடியோ, எண்பது கோடியோ வாங்கிக்கொண்டு, விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும், ரசிகர்களுக்கும் பொருள் இழப்பை ஏற்படுத்தும் இந்த நபர்தான் தமிழகத்தில் அரசியல் சிஸ்டத்தையே மாற்றி புரட்சி செய்யப்போகிறார் என்று சொன்னால் எல்லோரும் சிரிப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும்.
பாரதிய ஜனதா கட்சி எடுக்கும் இன்னொரு படம் இது என்பதால் அவருக்கு இந்த நிஜ வாழ்க்கை சினிமாவில் நடிக்க எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. ஊடகங்களுக்கும் அவரைக் குறித்து தொடர்ந்து பேசுவதில் பல ஆதாயங்கள். நோக்கம் எளிமையானது; எப்படியாவது தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுத்துவிட்டால் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை துண்டித்துவிடலாம். அ.இ.அ.தி.மு.க அடிமை அரசை மெள்ள, மெள்ள கரைத்து பாரதிய ஜனதா கட்சியில் கலந்துவிடலாம் என்பதாகத்தான் தோன்றுகிறது.
ஸ்கிரிப்ட் ஓகே. படம்தான் ஓடாது. கலைஞர் எழுதிய சமூக நீதி அரசியல்தான் தமிழக வரலாற்றின் ஸ்கிரிப்ட்.
அதை சுலபத்தில் யாராலும் மாற்றிவிட முடியாது…
**
கட்டுரையாளர் குறிப்பு
**
*
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)
*
�,”