ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் மன்றத்தினர் சுவரொட்டிகள் அடித்து ஒட்டியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்து தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். ரசிகர்கள் விரைவில் ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று எதிர்பார்க்க, மூன்று ஆண்டுகள் முடியும் நிலையிலும் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் ஊடகத்தினரை சந்தித்த ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் பயணம் குறித்த மூன்று முக்கிய திட்டங்களை அறிவித்தார். தான் முதல்வராக மாட்டேன் என்றும் நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் என்றும் கூறியிருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், கொரோனா காலத்திலும் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த போஸ்டர்கள் இன்று (ஆகஸ்ட் 27) தென்பட்டன. அதில், “உண்மையான, நேர்மையான வெளிப்படையான ஊழலற்ற ஆன்மீக அரசியல், இப்போ இல்லைனா எப்பவும் இல்ல, மாற்றத்தை நோக்கித் தமிழகம்” என்ற ரஜினியை கட்சி ஆரம்பிக்க அழைக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
**எழில்**
�,”