நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரியை செலுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கு 6,46,619 ரூபாய் சொத்து வரி விதித்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லை எனக் கூறி சொத்து வரி நோட்டீஸுக்கு எதிராக ரஜினி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியது.
இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, அதிக அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதையடுத்து, வழக்கை வாபஸ் பெற்றது ரஜினிகாந்த் தரப்பு. இதுபற்றி ரஜினிகாந்த், ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம் என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கான சொத்து வரி மாநகராட்சியில் இன்று (அக்டோபர் 15) காலை செலுத்தப்பட்டிருக்கிறது. சொத்துவரியாக 6,46,619 ரூபாயும், அதற்கு அபராதமாக 9,386 ரூபாயையும் செலுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். நேற்றைய தேதியிட்ட கர்நாடக வங்கியின் காசோலை மூலமாக பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான ரசீது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
*எழில்*�,