Zசிஏஏ: ரஜினி நிலைப்பாடு மாறுகிறதா?

Published On:

| By Balaji

நடிகர் ரஜினிகாந்த்தை இன்று (மார்ச் 1) இஸ்லாமிய மத குருமார்கள் அவரது சென்னை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். அப்போது சிஏஏ சட்டம் குறித்த பல்வேறு விளக்கங்களை அவர்கள் ரஜினியிடம் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது, ““நாட்டிற்கு என்.பி.ஆர் மிகவும் அவசியமாகும். 2010ஆம் ஆண்டே காங்கிரஸ் அரசு என்.பி.ஆர் கணக்கெடுப்பு மேற்கொண்டது. வரும் 2021ஆம் ஆண்டு அதனை மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டவர்கள் என்று தெரியும். என்.சி.ஆர் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதனை அமல்படுத்துவது பற்றி யோசனைதான் செய்துவருகிறார்கள். அதனுடைய வரைவு மற்றும் செயல்திட்டத்தை வெளியிடும்போதுதான் அது எப்படி இருக்கும் என்பது தெரியும.

சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பெரிய பீதியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். அது எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது? பிரிவினையின்போது இங்கிருக்கும் இஸ்லாமியர்கள், இந்தியாதான் தங்களது ஜென்மபூமி என்று கூறி இங்கேயே வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை எப்படி இந்தியாவிலிருந்து அனுப்புவார்கள். அதுபோன்று ஏதாவது நடந்தால் இஸ்லாமியர்களுக்கான இந்த ரஜினிகாந்த் முதலில் குரல் கொடுப்பேன். சில அரசியல் கட்சிகள் தங்களது சுயநலத்துக்காக, சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிடுகின்றன. இதற்கு மதகுருக்களும் துணைபோவது மிக மிக தவறான விஷயம்” என்று இஸ்லாமிய மத குருக்கள் மீது புகார் கூறியிருந்தார்.

உடனடியாக அப்போதே இது தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களின் அமைப்பான தமிழ்நாடு ஜமாத்துல் அல் உலமா சபை வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் ரஜினி போராட்டக்காரர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். ஜனநாயக ரீதியாகப் போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்ற பழியில் இருந்து அவர் விடுபட வேண்டும். ரஜினியைச் சந்தித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை திட்டமிட்டுள்ளது. ரஜினி விரும்பினால் அவரை சந்திப்போம்” என்று கூறியிருந்தது.

இந்த அறிக்கையின் விளைவாக ஜமாத்துல் அல் உலமா சபையை தொடர்புகொண்ட ரஜினி தனை சந்திக்க வருமாறு அழைத்தார். அதன்பேரில் இன்று (மார்ச் 1) காலை தனது இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைகளை சந்தித்து பேசினார். அப்போது உலமாக்கள் இந்த சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும், அதில் கேட்கப்படும் கேள்வி குறித்தும் தெளிவாக விளக்கினர். இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை என்பதையும், இந்து உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கபடுவார்கள் என்று ஆதாரத்துடன் உலமாக்கள் ரஜினிக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை இஸ்லாமி யர்கள் எதிர்க்கவில்லை என்றும், அதில் புதிதாக கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கே அச்சத்தை ஏற்படுத்துவதை விரிவாக உலமாக்கள் கூறினார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் விளக்கத்தை கேட்டு ரஜினிகாந்த் ஆடிப் போனார்

ரஜினியை சந்தித்த பின் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி காஜா மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களுடைய நியாயங்களை கூறினோம், அதனை ரஜினி உணர்ந்துகொண்டார். சிஏஏ, என்.ஆர்.சி. போராட்டங்கள் குறித்து ரஜினியிடம் எடுத்துச் சொன்னோம்.. ரஜினி புரிந்து கொண்டார். நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

இந்த சந்திப்புக்குப் பின் ஜமாதுல் உலமா சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஜமாத்துல் உலமாவின் கருத்துகளை கவனமாகக் கேட்டறிந்தார் ரஜினி. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா முழுக்க சிஏஏ, என்.ஆர்.சி. என்பிஆர் உள்ளிட்டவை பற்றி எழுந்திருக்கும் அச்சத்தின் நியாயங்களை அவரிடம் எடுத்துச் சொன்னபோது அது சரிதான், அதில் நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டார்.

அத்தோடு இந்த அச்சத்தைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களைப் போன்ற மத குருக்கள் தீர்மானித்து சொன்னால், நாட்டில் உள்ள அச்சம் அகன்று அமைதி ஏற்பட தன்னால் இயன்ற அனைத்தையும் உங்களோடு இணைந்து செய்ய தயாராக இருக்கிறேன் என உறுதியளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பெரிய பீதியை கிளப்பிவிட்டுவிட்டார்கள் என்று பிப்ரவரி 5 ஆம் தேதி சொன்ன ரஜினி, மார்ச் 1 ஆம் தேதி சிஏஏ பற்றிய இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகளின் அச்சம் சரிதான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். இதிலிருந்து சிஏஏ விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு மாறுகிறது என்கிறார்கள் அவரை சந்தித்த மத குருமார்கள்.

இந்த சந்திப்பு பற்றி ரஜினி என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்தே ரஜினியின் நிலைப்பாடு மாறுகிறதா இல்லையா என்று தெரியும்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share