�டிஜிட்டல் திண்ணை: ரஜினியை டார்கெட் வைக்கும் உதயநிதி: குடியுரிமை தாண்டிய பின்னணி!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள், கட்சிகள், மாணவர்கள் போராடி வருகின்றனர். இதில் தமிழகம் தவிர்த்து கர்நாடகாவில் இருந்து அஸ்ஸாம் வரை போராட்டங்களில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலி என்று வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் நடந்த போராட்டங்கள் இதுவரை அமைதியான ஆவேசத்துடன் தான் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ரஜினிகாந்த் இதுபற்றிய 19 ஆம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டுநலனை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது, நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதத்துக்குள்ளானது. ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறாரா,எதிர்க்கிறாரா என்று முதலில் கூறட்டும் என்று சீமான் பதில் அளித்தார். ரஜினியை நேரடியாகவே பலரும் சமூக தளங்களில் விமர்சித்தார்கள்.

அதேநேரம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவுதான், விவகாரத்தை வேறு தளத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. வரும் 23 ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்த உதயநிதி, ‘உரிமைக்கான போராட்டத்தை கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்’ என்று ரஜினியை மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.

இந்த ட்விட் வெளிவந்தவுடன் திமுகவின் குடியுரிமை சட்ட எதிர்ப்பு விவாதிக்கப்படுவதற்கு பதிலாக ரஜினியை விமர்சனம் செய்ததே சமூக தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதப் பொருளானது. இதை ரஜினி ஆதரவாளர்கள், ரஜினி எதிர்ப்பார்கள் இருவருமே தங்களுக்கான வகையில் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்;

உதயநிதிக்கு எதிரான நகர்வுகள் டெல்லியில் இருந்தே தொடங்கிவிட்டன. திமுகவை வகை வகையாக எதிர்ப்பதில் திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பா இந்த விவகாரத்தை டெல்லி பாஜக தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்க்கிறார். ‘பெரியவர்களை எல்லாம் விட்டுவிட்டு பேரணிக்கு வரவும்’என்று திமுகவின் தலைவரின் மகன் பகிரங்க அழைப்பு விடுக்கிறார் என்றால் இது வன்முறைக்கான திட்டம்தான். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். ரஜினியை எதிர்ப்பதாகச் சொல்லி திமுகவின் திட்டத்தை அவர் சொல்லாமல் சொல்லிவிட்டார்’ என்று தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு பக்கம் தமிழகத்தில் பாஜக, இந்துத்வ அமைப்புகள் மூலம் உதயநிதிக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்து மக்கள் கட்சியினர் ஆங்காங்கே உதயநிதிக்கு எதிராக காவல்றையில் புகார் கொடுத்து வருகின்றனர்.

ரஜினி தரப்பிலோ சமூக தளங்களில் ரசிகர்கள் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தாலும் ரஜினி அமைதியாகவே இருக்கிறார். ‘ஏற்கனவே முரசொலியில் என்னைப் பற்றி அவதூறு கட்டுரை போட்டாங்க. உடனே அதுக்கு வருத்தம் தெரிவிச்சாங்க. இப்ப அந்த சின்னப் பையன் என்னை எதிர்த்துப் பேசி பேர் வாங்க நினைக்குறாரு. வாங்கிட்டுப் போகட்டும் அதை பெரிசுபடுத்தக் கூடாது’ என்பதே இப்போது ரஜினி தரப்பின் நிலைப்பாடாக இருக்கிறது.

திமுக வட்டாரத்தில் விசாரித்தால் வேறு தகவல்களைச் சொல்லுகிறார்கள். உதயநிதி தனக்கான ஒரு தகவல் தொழில் நுட்ப டீம் அமைத்திருக்கிறார். உதயநிதியின் அரசியல் மைலேஜை அதிகப்படுத்துவதே அவர்களின் வேலை. அந்த டீம் ஆலோசனையின் பேரில்தான் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் ரஜினியைத் தொட்டுக் கொண்டு அவர் ட்விட்டியிருக்கிறார். ரஜினி அரசியல் களத்துக்கு வந்தால் ரஜினியா, ஸ்டாலினா என்பதே போட்டியாக இருக்கும் என்பதை இப்போதே புரிந்துகொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி.

நேரடியாக பாஜகவைத் தாக்காமல் ரஜினியை டார்கெட் வைப்பதன் நோக்கம் இதுதான். எப்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக-திமுக மோதலில் இருந்து திமுக-பாமக மோதலாக ஸ்டாலின் மாற்றினாரோ, அதேபோல குடியுரிமை சட்ட எதிர்ப்பு விவகாரத்தை பாஜகவுடனான மோதல் என்பதற்கு பதிலாக ரஜினியுடனான மோதலாக மாற்றிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த ட்விட்டுக்காக உதயநிதி மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் போடப்பட்டாலும் அது அவருக்கு அரசியல் ஆதாயமே என்று காத்திருக்கிறது திமுக தரப்பு”என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share