தூத்துக்குடியில் சமூக விரோதிகள்: பின்வாங்கிய ரஜினி விரைவில் விசாரணை!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2018 மே 22 ஆம் தேதி நடந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் குண்டுகள் பாய்ந்து கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுதும் அப்போது கொதிநிலையை ஏற்படுத்திய நிலையில், “எதற்கெடுத்தாலும்போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து போலீஸை தாக்கிவிட்டார்கள். அதனால்தான் இந்த கலவரம் ஏற்பட்டது”என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில் தான் அன்று கொடுத்த பேட்டிக்கு தன்னிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றும், அது தற்செயலாக அளித்த பேட்டி என்றும் ரஜினிகாந்த் தனது வழக்கறிஞர் மூலமாக பதில் அளித்திருக்கிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இந்த ஆணையம் விசாரித்து வருகிறது.அந்த வகையில், ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள்’ என்ற ரஜினியின் பேட்டி பற்றி அவரிடம் விசாரிக்க ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஆணையத்தின் 27-ம் கட்ட விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில் ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் ஏப்ரல் 22 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் சார்பில் இதுவரைக்கும்1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 712 பேர் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த 27-ம் கட்ட விசாரணையில் மட்டும் 48 பேர் சாட்சியம் அளித்துள்ளார். அடுத்தகட்ட விசாரணை மே 17-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும்”என்றவரிடம்,

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டதே விசாரணை நடந்ததா, விவரங்கள் என்ன?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆணையத்தின் வழக்கறிஞர், “ நடிகர் ரஜினிகாந்திடம் 15 கேள்விகள் கேட்டிருந்தோம்.எல்லாவற்றுக்கும் பதில் அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தான் நடத்திய செய்தியாளர் சந்திப்பு திட்டமிட்டது அல்ல என்றும், அது தற்செயலாக நடந்தது என்றும் ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், மே 22 ஆம் தேதி நடந்த அந்த சம்பவத்தன்று ஊர்வலத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என்று கூறியதற்கான ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் ரஜினி ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

இருப்பினும் அவரது வயது காரணமாகவும்,கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் ரஜினியிடம் விசாரணை நடத்தும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்” என்று கூறினார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share