அரசியலுக்கு வருவதாக 25 வருடங்களாக சொல்கிறேனா? ரஜினி

Published On:

| By Balaji

தான் 25 வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், சமீபகாலமாக அவரது அரசியல் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மார்ச் 5ஆம் தேதி நடந்த மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த். மாவட்டச் செயலாளர்கள் கூறியதில் தனக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டதாகவும், அதனை பிறகு சொல்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மார்ச் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த முக்கிய தகவலை வெளியிடவுள்ளார் என்று அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு சென்றது.

ரசிகர்கள் மத்தியில் இந்தத் தகவல் பரவியதால் சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு இன்று (மார்ச் 12) காலை முதலே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க கூட்டமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. சரியாக 10 மணியளவில் வீட்டிலிருந்து பட்டு, வேட்டிச் சட்டையுடன் காரில் புறப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் லீலா பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றார் ரஜினிகாந்த். வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள், காருக்கு மலர்த்தூவி அனுப்பிவைத்தனர்.

லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “இந்த சந்திப்பு ஏன் என்று உங்களுக்கே தெரியும். சில நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முடித்த பிறகு ‘அனைத்தும் நன்றாக நடந்தது, எனக்கு மட்டும் ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை, ஏமாற்றம்தான்’ என்று சொல்லியிருந்தேன். இதுபற்றியும் உள்ளே நடந்தது பற்றியும் ஊடகங்களில் பல விதமான செய்திகள் வெளிவந்தன. மாவட்டச் செயலாளர்கள் தரப்பிலிருந்து எதுவும் வெளிவராததால் என்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சந்திப்பு” என்று தெரிவித்தார்.

“25 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன், வருகிறேன் என்றுதான் சொல்லி வருகிறார் என பலர் கூறுகிறார்கள். 2017 டிசம்பர் 31ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு முன்பு நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியதே கிடையாது. எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்விக்கு, அது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று சொல்வேன். இனிமேல் என்னுடைய அரசியல் வருகை பற்றி யாரும் சொல்லமாட்டார்கள். 96ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அரசியலில் நான் மிகவும் போற்றும் பெருமதிப்பிற்குரிய கலைஞர், மூப்பனார், சோ ஆகியோரோடு என்னுடைய பாத்திரம் இடம்பெற்றது. அதன்பிறகு ஒருவேளை அரசியலுக்கு வந்தால் எந்த திட்டத்துடன் செல்ல வேண்டுமென தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்தேன் என்று கூறிய ரஜினிகாந்த்,

“2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா காலமான பிறகு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவானது. அப்போதுதான், என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறி அரசியலுக்கு வருவதாக அறிவித்தேன். அப்போது, சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, அதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறினேன். சிஸ்டத்தை சரிசெய்யாமல் ஆட்சியைப் பிடித்தால் மீன்குழம்பு வைத்த பானையை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share