ரஜினி பேச்சு: மனம் சிதறிய மாவட்டச் செயலாளர்கள்!

Published On:

| By Balaji

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி பற்றிய அடுத்த முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறார் என சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நேற்று (மார்ச் 12) காலை 9.30 மணியில் இருந்தே பத்திரிகையாளர்கள் கேமராக்களோடு குவிய தொடங்கினார்கள்.

நேற்று காலை 9 மணிக்குக் கடந்த வாரம்தான் சந்தித்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை மீண்டும் சந்திக்குமாறு அழைத்திருந்தார் ரஜினி. காலை 9 மணிக்கெல்லாம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆஜராகி விட்டனர். ஆனால், அவர்களை ஒரு வேன் மூலம் 10 மணிக்கு ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அங்கேயே தொலைக்காட்சி முன்னால் அமர வைக்கப்பட்டனர். காலை 10.30 மணிக்கு மிகச் சரியாக லீலா பேலஸ் ஹோட்டலுக்கு நுழைந்தார் ரஜினி.

லீலா பேலஸில் தரைத்தளத்துக்குக் கீழே இருக்கும் பேஸ்மென்ட் ஹாலில்தான் ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளரின் அடையாள அட்டையையும் சரிபார்த்து உள்ளே அனுப்பப்பட்ட நிலையில் ரஜினி வரும்போது… கேட்பார் கேள்வியின்றி அவரோடு சுமார் 100 பேர் அந்த வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்களை காவலர்கள் கதவுக்குப் பின்னே தள்ளுவதற்கு கடும் சிரமப்பட்டனர்.

10.30 மணிக்கு ஆரம்பித்து சுமார் 40 நிமிடங்கள் ரஜினி தன் கருத்துகளை எடுத்து வைத்தார். இதை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் டிவியில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எனக்கு முதலமைச்சர் ஆசை கிடையாது. கட்சி வேறு… ஆட்சி வேறு. இன்னொரு நல்ல இளைஞரை முதல்வர் ஆக்குவேன். மக்களிடம் எழுச்சி வந்த பிறகு அதை நான் செய்வேன்” என்று ரஜினி அனைத்தையும் பேசி முடிக்க அடுத்த விநாடியே பத்திரிகையாளர்கள் கேள்வி கணைகளை வீசத் தயாரானார்கள். ‘நீங்கள் கட்சி ஆரம்பிப்பீர்களா, இல்லையா?’ என்ற ஆங்கிலக் குரல் ஒன்று வேகமாக ரஜினியை நோக்கிப் பாய, “நான் இப்ப உங்க கொஸ்டின்ஸுக்குப் பதில் சொன்னா நான் பேசினது டைல்யூட் ஆயிடும்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்பி விட்டார் ரஜினி. பத்திரிகையாளர்களுக்கு சைவம், அசைவம் என இரண்டு வகை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

லீலா பேலஸ் ஹோட்டலில் பேசி முடித்த ரஜினி காரில் ஏறி தனது வீட்டுக்குச் சென்றார். அங்கே ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அதிர்ச்சியோடுக் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்த ரஜினி சுமார் நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் மட்டுமே அவர்களோடு பேசினார். “பாத்தீங்கள்ல… இதுதான் என் நிலைப்பாடு. ஒவ்வொருத்தரும் மாவட்டத்தில் போய் மக்களைப் பாருங்க, இளைஞர்களைத் தேடுங்க. அடுத்த சந்திப்பு பத்தி நான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு விடை அளித்தார் ரஜினி.

சில மாவட்டச் செயலாளர்கள் ஏதோ எடுத்துக்கூற முயல… அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்றார் ரஜினி. அடுத்த பத்தாவது நிமிடம் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.

சில மாவட்டச் செயலாளர்களிடம் நாம் பேசும்போது… “நாங்க கடுமையான ஏமாற்றத்தில் இருக்கோம். ஊருக்குப் போயி ரசிகர்கள்கிட்டேயும், நிர்வாகிகள் கிட்டேயும் என்ன சொல்றது? இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நாங்க போன மீட்டிங்லேயே சொன்னோம். ஆனா, தலைவர் ஒரு முடிவு எடுத்துட்டுத்தான் போன மீட்டிங்கையே நடத்தியிருக்காரு” என்று விரக்தியுடன் கூறினார்கள்.

நேற்று மாலை எழும்பூர் ரயில் நிலையத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் ரயில் ஏறுவதற்காகக் கூடியிருந்தனர். அப்போது அதில் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாவட்டச் செயலாளர்,

“தலைவர்கிட்ட ஏதோ ஒரு தயக்கம் தெரியுது. 35 வருஷமா நான் அவரைப் பக்கத்துல இருந்து பார்த்துட்டு இருக்கேன். ஆனா இன்னிக்கி அவர் பேசின பேச்சுல ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுது. இனிமே மாவட்டச் செயலாளர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடுற சந்தர்ப்பம் கிடைக்கும்னு எனக்கு தோணல. அதனால எல்லாரும் இன்னிக்கு ஒண்ணா சாப்பிடலாம்” என்று கண் கலங்கியிருக்கிறார்.

நேற்று காலை நம்பிக்கையோடு வந்த மாவட்டச் செயலாளர்கள், இரவு சென்னையிலிருந்து புறப்பட்டபோது அவர்களின் மனநிலை இதுதான்.

**-ஆரா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share