பிரதமர் தன்னை இரண்டு முறை அரசியலுக்கு அழைத்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு அழைத்தவர்கள் குறித்தும், அதற்கு தான் சொன்ன பதிலையும் வெளிப்படுத்தினார். அதனூடே பிரதமர் தனக்கு விடுத்த அழைப்பையும் சுட்டிக்காட்டினார்.
“96 ஆம் ஆண்டிலிருந்து சோ, மூப்பனார், சிதம்பரம் உள்ளிட்ட பலரும் என்னை அரசியலுக்கு அழைத்தார்கள். பிரதமர் என்னிடம், ‘திராவிட கட்சிகளை வீழ்த்த ஒரு நல்ல வாய்ப்பு, நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். நாம் சேர்ந்து ஈடுபடலாம்’ என்று தெரிவித்தார். நான் நோ…சாரி என்று கூறிவிட்டேன். சோ என்னை எப்போதும் பாசிஸ்ட் என்றுதான் கூறுவார். ஒருமுறை முடிவு செய்துவிட்டால் அதில் உறுதியாக இருப்பேன். முதல்வர் பதவி என்பதை என்பதை என்னால் நினைக்க முடியவில்லை. நான் கட்சித் தலைவராக இருப்பேன்” என்று கூறிய ரஜினிகாந்த்,
“எங்கள் கட்சி ஆட்சியமைத்தால் முதல்வராக புதிதாக யாரையோ, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை அமரவைக்கப்போவதில்லை. கட்சியிலிருந்து தன்னம்பிக்கையான, தொலைநோக்கு பார்வையுள்ள, சிந்தனையாளனாக இருக்கும் இளைஞனை முதல்வர் பதவியில் அமர்த்துவேன். ஆட்சியில் இருந்தாலும் என்னுடைய கட்சி எதிர்க்கட்சியை போல செயல்படும்.
எந்தத் தவறு நடந்தாலும் உடனடியாக சுட்டிக்காட்டி திருத்துவோம். சரிசெய்யவில்லை என்றால் அவர்களை தூக்கி எறிவோம். கட்சியில் இருப்பவர்கள் யாரும் ஆட்சியில் இருப்பவர்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். பெரிய தலைவர்களின் மறைவுக்கோ, தலைவர்களின் சிலைகளுக்கோ மரியாதை செலுத்த ஆட்சியாளர்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதனை கட்சிப் பார்த்துக்கொள்ளும்” என்றும் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
**எழில்**�,