கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை: ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி

Published On:

| By Balaji

முதல்வர் பதவி குறித்து நினைத்துக் கூட பார்த்ததில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மார்ச் 5ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த், ‘ஆட்சியமைத்தால் நான் முதல்வராக மாட்டேன்’ என்று கூறியதாகவும், அதற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதைத்தான் ரஜினி ஏமாற்றம் என குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னை லீலா பேலஸ் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், “இந்தியாவில் தேசிய கட்சிகளைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் ஒருவரே இருப்பார். இப்படி இருந்தால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்கள் அவர்களிடம் கேள்வியே கேட்க முடியாது. கட்சியில் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஏனெனில் கட்சித் தலைமையே அவர்தானே” என்று கூறியவர்,

“ஆகவே, கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே எனது நிலைப்பாடு. ரஜினி ஆட்சிக்கு தலைவரா அல்லது கட்சிக்குத் தலைவரா என்ற கேள்வி எழும். சி.எம் போஸ்டை எப்போதைக்கும் நான் நினைத்ததில்லை. சட்டமன்றத்தில் நான் சென்று பேசுவதை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அது எனக்கு ரத்தத்திலிருந்தே வரவில்லை. கட்சியின் தலைவராக மட்டுமே செயல்படுவேன்” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் பதவியை ஏற்கமட்டேன் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளது, மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share