நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு பற்றியும் ஆட்சி வேறு கட்சி வேறு என்ற தனது புதிய கருத்து பற்றியும் மார்ச் 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக கூறினார். தனக்கு முதல்வர் ஆகும் ஆசை அறவே இருந்ததில்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார். அன்று முழுவதும் அதைத் தொடர்ந்தும் அரசியல் வட்டாரங்களில் இதுவே தொடர் விவாதப் பொருளானது.
இந்த விவாதம் நாடாளுமன்றத்தையும் விட்டுவக்கவில்லை. ரஜினி முடிவு பற்றி நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் எம்பிக்கள் செல்லகுமார், வசந்தகுமார், திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார் உள்ளிட்ட எம்பிக்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
ரஜினியின் முடிவு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தத்தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு எம்பி மட்டும் வித்தியாசமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
“ரஜினியை இன்னும் பலரும் சரியா புரிஞ்சுக்கல. ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக வருவார். அதை இப்போதே சொன்னால் அவரை எதிர்ப்பவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பார்கள். எனவே தான் இப்போது நான் முதல்வர் இல்லை என்று அறிவித்திருக்கிறார். மக்கள் மன்ற மாவட்ட தலைவர்களும், வேறு பல அரசியல் கட்சி தலைவர்களும் அவரை சந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைக்கலாம். அதை மக்கள் சொன்னால் ஏற்கிறேன் என்று அவர் கூறலாம். தேர்தல் நேரத்தில் பல தரப்பினரின் வற்புறுத்தலை ஏற்று ரஜினியே கூட முதல்வர் வேட்பாளராக கூட ஆகலாம். ரஜினியை அதிகம் அறிந்தவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்” என்று அந்த எம்பி தெரிவித்துள்ளார். அவர் அண்மையில்தான் ரஜினியை சென்று சந்தித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வேந்தன்**�,