ரஜினியின் முதல்வர் வேட்பாளர் கமல்? மீண்டும் தொடங்கும் கணக்குகள்!

Published On:

| By Balaji

ரஜினி மாற்று அரசியலை அறிவித்துவிட்டு, அடுத்த கட்டம் குறித்து இன்னும் அறிவிக்காத நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தெரிவித்திருக்கும் கருத்து வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த மார்ச் மாதம் ரஜினிகாந்த், “முதல்வராகும் ஆசை எனக்கில்லை. ஆனால் நேர்மையான நல்லவரை முதல்வர் ஆக்குவேன்” என்று அறிவித்தார். அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக ரஜினியின் அரசியல் குறித்த செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நோய் எதிர்ப்பு சக்திக்கான தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ரஜினி விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவருக்கு நெருக்கமான முன்னாள் சென்னை பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்து வருகிறார். அதேநேரம் ரஜினியின் அரசியல் பிரவேசம் நடக்குமா என்பதே சந்தேகம்தான். அவரது உடல் நிலையைக் கருத்தில்கொண்டு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

இந்த காலகட்டத்தில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சி.குமாரவேல் ஜூலை 29ஆம் தேதி, ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், “ரஜினியும் கமலும் அரசியலிலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களது விருப்பமாக உள்ளது. இதுவே மக்களின் விருப்பமாக உள்ளது. அவ்வாறு கமலும் ரஜினியும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். காரணம், ஏற்கனவே ரஜினி தனக்கு முதல்வராகும் ஆசையெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டார். இருவரும் சேர்ந்தால் பெரிய மாற்றம் நிகழும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுபோல் இது குமரவேலின் கருத்தா அல்லது குமரவேல் மூலம் கமல்ஹாசன் முன்வைக்கும் கருத்தா என்ற விவாதம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதமே ரஜினி பற்றி குறிப்பிட்ட கமல்ஹாசன், “அவர் பெருமை மிக்க தமிழன். அவரது எல்லா செயல்பாடுகளும் தமிழர்களுக்காகவே அமைய விரும்புகிறேன். அவரை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்வேன். ரஜினியின் மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது. திராவிட அரசியல் என்பது தமிழகத்தின் தேவையாக இருந்தது. இப்போது அது சிலரின் தேவையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசன் கட்சி தொடங்கி முழுமையான கட்டமைப்பு பலத்தை அமைக்க இன்னும் போராடி வருகிறார். ஆனால் ரஜினி இன்னும் கட்சியே தொடங்காமல் ரஜினி மக்கள் மன்றம் என்ற கட்டமைப்பு பலத்தை ஓரளவு பெற்றுள்ளார். இந்த நிலையில் ரஜினி கட்சி தொடங்கி கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ரஜினிக்கும் தான் அரசியலுக்கு வரத் தவறிவிட்டோம் என்ற குறை நீங்கும். கமலுக்கும் இது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற கணக்கு கமல் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.

கமல் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் உண்மையிலேயே ஒன்றிணைந்தால், அது ஒரு புதிய வகையான அரசியல் வேகத்தை உருவாக்கக்கூடும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது சக்தி என்பது பலவீனமாக இருந்ததால், இரு திராவிடக் கட்சிகளும் இதுவரை போட்டு வந்த அரசியல் கணக்கை கமல் ரஜினியின் கூட்டணி உடைக்கும். இந்த இரண்டு நட்சத்திரங்களும் உண்மையில் கைகோத்தால், அவை திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடும் ”என்கிறார் திரைப்பட ஆய்வாளர் ஜி. தனஞ்சயன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய பின் 2019 தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன் பல்வேறு தொகுதிகளில் குறிப்பாக நகர்ப்புற தொகுதிகளில் நல்ல வாக்குகள் வாங்கியிருக்கிறார். கமலின் கட்சி எந்த இடத்தையும் வெல்லத் தவறிய போதிலும், அது 13 இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, அவற்றில் நான்கு இடங்களில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒட்டுமொத்தமாக, ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் ரஜினி புதிய கட்சி ஆரம்பித்து இரு கட்சிகளும் இணையும்போது ஏற்கனவே கமலின் கள அனுபவம், ரஜினியின் அரசியல் மாஸ் ஆகியவை ஒன்று சேர்ந்து ரஜினி சொன்னதுபோலவே அற்புதத்தை நிகழ்த்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆனால் கராத்தே தியாகராஜன் போன்ற ரஜினிக்கு நெருக்கமானவர்கள், “கமல் ரஜினி பொருந்தாக் கூட்டணி” என்றே கருதுகிறார்கள். இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் மூலம் ரஜினி – கமல் கூட்டணிக்கான தேவை மீண்டும் ஒருமுறை பொதுவெளியில் வைக்கப்பட்டிருக்கிறது.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share