நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று (மார்ச் 1) இஸ்லாமிய மத குருமார்கள் அவரது சென்னை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். அப்போது சிஏஏ சட்டம் குறித்த பல்வேறு விளக்கங்களை அவர்கள் ரஜினியிடம் தெரிவித்தனர்.
ரஜினியை சந்தித்த பின் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி காஜா மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களுடைய நியாயங்களை கூறினோம், அதனை ரஜினி உணர்ந்துகொண்டார். சிஏஏ, என்.ஆர்.சி. போராட்டங்கள் குறித்து ரஜினியிடம் எடுத்துச் சொன்னோம்.. ரஜினி புரிந்து கொண்டார். நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
இந்த சந்திப்புக்குப் பின் ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஜமாஅத்துல் உலமாவின் கருத்துகளை கவனமாகக் கேட்டறிந்தார் ரஜினி. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தியா முழுக்க சிஏஏ, என்.ஆர்.சி. என்பிஆர் உள்ளிட்டவை பற்றி எழுந்திருக்கும் அச்சத்தின் நியாயங்களை அவரிடம் எடுத்துச் சொன்னபோது அது சரிதான், அதில் நியாயம் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டார்”என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த சந்திப்பு பற்றி ரஜினி என்ன சொல்கிறார் என்பதைப் பொறுத்தே ரஜினியின் நிலைப்பாடு மாறுகிறதா இல்லையா என்று தெரியும் என்று மின்னம்பலத்தில் நேற்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் ரஜினி மார்ச் 1 ஆம் தேதி இரவு 10.47 மணிக்கு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட கருத்தை ஆமோதித்திருக்கிறார்.
“இன்று ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிஏஏ விவகாரத்தில் ரஜினியின் குரல் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
**-வேந்தன்**
[சிஏஏ: ரஜினியின் நிலைப்பாடு மாறுகிறதா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2020/03/01/47/rajinic-change-his-stand-on-caa-ilsmaic-priest-meet-rajini)�,”