ரஜினியின் அறிவிப்பு ரசிகர்களை தாண்டி மு.க.அழகிரிக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அரசியலில் தனது அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக மார்ச் 12 செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “நான் முதலமைச்சராக மாட்டேன். கட்சியின் தலைவராக மட்டுமே செயல்படுவேன். நல்லவரை, சிந்தனையாளரை, தொலைநோக்கு பார்வை கொண்டவரை முதல்வராக்குவேன். 50 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு 60 சதவிகிதம் வரை முன்னுரிமை அளிப்பேன். மற்ற கட்சிகளில் இருந்து வரும் நல்லவர்களுக்கு 30 சதவிகிதம் வரை பதவிகள் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.
முதல்வராக மாட்டேன் என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு, அவரது ரசிகர்களைத் தாண்டி கலைஞரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக அழகிரி வட்டாரங்களில் விசாரித்தோம்…
2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவர் வேறு எந்தக் கட்சிகளிலும் சேராமல் அமைதிகாத்து வந்தார். கலைஞரின் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ஆரம்பகாலம் தொட்டே ரஜினியுடன் மிகவும் நெருக்கமாக இருந்துவருகிறார் அழகிரி. கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விஐபிக்கள் விசாரிக்க வந்தபோது ஸ்டாலினுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் மட்டுமே வெளியானது. ரஜினி சந்திப்பின்போது மட்டும்தான் ரஜினி-அழகிரி இருக்கும் புகைப்படமும் வெளியானது. அதன்பிறகும் தொடர்ச்சியாக ரஜினியுடன் டச்சில் இருந்தார் அழகிரி. ‘ஸ்டாலின் ஜாதகப்படி முதல்வராக முடியாதுனு சொல்றாங்க. ரஜினி கட்சி ஆரம்பிச்சார்னா, அவர்தான் அடுத்த முதல்வர்’ என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொல்லி வந்த அழகிரி. அதன்மூலம் அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை அடித்து ஆடலாம் என்று நினைத்தார்.
ஆனால், தான் முதல்வராகமாட்டேன் என ரஜினி வெளியிட்ட அறிவிப்பு அழகிரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக ரஜினிக்கும் தனக்கும் பொதுவான ஒரு நண்பரிடம் தனது பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் அழகிரி. மேலும், தான் ரஜினியை சந்திக்க வரவா என்றும் கேட்டிருக்கிறார். ஆனால், இப்போது பேச வேண்டாம். நான் பேசிவிட்டு சொல்கிறேன், அதன்பிறகு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார் அந்த பொதுவான நபர்.
ரஜினி மீது வைத்த மிகப்பெரிய நம்பிக்கையால் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குக் கூட அழகிரி செல்லவில்லை. அங்கு அஞ்சலி செலுத்தச் செல்லும்போது குடும்ப உறவுகளை பார்க்க நேரிடும். அவர்கள் மீண்டும் தன்னை திமுகவில் இணைக்க முயற்சி எடுக்கிறேன் என்ற பெயரில் ஏதாவது செய்வார்கள். ரஜினி கட்சியில் இணைய முடிவெடுத்த இந்த நேரத்தில் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் அதனை தவிர்த்தார். ஆனால் இப்போதைய ரஜினியின் முடிவால் அவர் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளார் என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில்.
**வணங்காமுடி**�,