ரஜினி முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளதாக மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.
மார்ச் 5ஆம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களிடம் ரஜினிகாந்த், ‘நாம் இங்கே பேசுவது உங்களைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. அந்த அளவுக்கு நீங்கள் ரகசியம் காக்கவேண்டும்’என்றார். இதுதொடர்பாக ஊடகங்களில் பலவிதமான தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில்தான் சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீரென அழைப்பு விடுத்தார் ரஜினிகாந்த். அரசியல் கட்சி பற்றிய முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறார் என நினைத்த ரசிகர்கள், உற்சாகத்தின் உச்சகட்டத்திற்கே சென்றனர். நேற்று காலை முதலே சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினி இல்லத்திலும், லீலா பேலஸ் ஹோட்டல் முன்பும் ரசிகர்கள் கூடினர். வீட்டிலிருந்து ரஜினி கார் வெளியே செல்லும்போது பூக்கள் தூவி வழியனுப்பினர்.
அதுபோலவே பல மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாக மிகுதியில் இருந்தனர். கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியானதும் பட்டாசு வெடித்து நகரத்தை திணறடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது தொடர்பாகவோ அரசியல் கட்சி தொடர்பாகவோ எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கினார். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே அரசியலுக்கு வருவேன் என்று கூறினார். இதையெல்லாம் விட முதலமைச்சராகமாட்டேன் என ரஜினி அறிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் கடலூர் ரஜினி ரசிகர்கள் வாங்கிவைத்திருந்த பட்டாசுகளை அப்படியே கீழே போட்டுவிட்டு, தங்களுக்குள் முணுமுணுத்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைவர் ஒ.எல்.பெரியசாமியிடம் பேசினோம், “அன்றும் இன்றும் என்றும் தலைவர் கட்டளையை ஏற்று நடப்போம். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது உள்பட நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் சில நிபந்தனைகளை விதிக்கிறார்.
ரஜினி முதல்வராக பொறுப்பேற்க வேண்டும். கட்சியின் தலைமையையும் ஏற்க வேண்டும் என்றுதான் ரஜினி ரசிகர்களாகிய நாங்கள் வலியுறுத்துவோம். தேர்தல் வருவதற்கு எட்டு மாதத்திற்கு முன்பு நிச்சயமாக கட்சி துவங்குவார். அதன் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்” என்கிறார்.
இதுதான் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.
**-வணங்காமுடி**
�,”