ரஜினிகாந்த் நேற்று (மார்ச் 5) நடத்திய ரஜினி மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் தெரிவித்தாக ஒரு தகவல் மெல்ல மெல்லப் பரவி வருகிறது.
“ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் நான் முதல்வர் பதவி ஏற்கமாட்டேன். கட்சியின் தலைவராக மட்டுமே நான் இருப்பேன்” என்று ரஜினி சொன்னதாக பரவிய தகவல்களால் ரஜினியின் ரசிகர்கள் பலரும், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் குழம்பியிருக்கிறார்கள்.
கூட்டத்தில் இதுபற்றி ரஜினி பேசினாரா என்று விசாரித்தோம்.
“பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த ரஜினி, திடீரென ஒரு கணம், ‘ஆட்சி ஒருத்தரிடம், கட்சி ஒருத்தரிடம்னு இருந்தால் சரியா வருமா?’ என்று கேட்டார். முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என்றெல்லாம் அவர் உச்சரிக்கவில்லை. இந்த ஒரே ஒரு கேள்வியைதான், அவர் கேட்டார். அதற்கு சில மாவட்டச் செயலாளர்கள், ‘அதெல்லாம் தமிழ்நாட்டுக்கு செட் ஆகாது தலைவரே…’னு சொல்லிட்டாங்க. தமிழ்நாட்ல கட்சியும், ஆட்சியும் ஒருத்தர்கிட்ட இருக்கிறததான் மக்கள் ஏத்துப்பாங்க. சோனியா தலைவரா இருந்தப்ப மன்மோகன் சிங் பிரதமரா இருந்தாரு. ஆனா ஆட்சி முடிஞ்ச பிறகும் வெற்றி தோல்விகள் எல்லாம் சோனியாவுக்குதான் போகுது. ஜேபிநட்டா பிஜேபியில தலைவரா இருந்தாலும் அந்த கட்சியோட முகம் மோடிதான். அதனால தமிழ்நாட்டுக்கு ஆட்சி, கட்சி ரெண்டும் ஒருத்தர்கிட்ட இருந்தவரை பிரச்சினை இல்லை. ஜெயலலிதா காலமான பிறகு அதானே இப்ப பிரச்சினையாவே இருக்கு. மாவட்டச் செயலாளர்கள் சொன்ன பதிலைக்கேட்டுக் கிட்டு ரஜினி அடுத்த சப்ஜெட்டுக்கு போயிட்டார்” என்றவர்கள் மேலும் நம்மிடம் தொடர்ந்தனர்.
“ரஜினி முதல்வர் ஆவார், ஆக வேண்டும் என்றுதான் இத்தனை வருடமாக ரசிகர் மன்றத்தினர் ரஜினி பின்னால் நின்றுகொண்டிருக்கிறார்கள். வெகு தாமதமாகவே அரசியல் அறிவிப்பை செய்த ரஜினி, கட்சி அறிவிப்பை இன்னும் செய்யவில்லை. அதற்குள்ளேயே கட்சிக்கு ரஜினி, ஆட்சிக்கு வேறு ஒருவர் என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தால் ரஜினியின் பின்னால் பயணிக்கும் பலர் இப்போதே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிடுவார்கள். இது ரஜினிக்கும் தெரியும். அதனால்தான் அந்த ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு பதில் கிடைத்தவுடனேயே சட்டனெ அதைக் கடந்துவிட்டார். ஏனென்றால் 2017 இறுதி நாளிலேயே அவர் மக்கள் மன்றத்தினரிடம் பேசியபோது, ‘ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வேன். முடியலையேன்னா ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டே இருப்பேன்’ என்று சொன்னார். ரஜினி என்ற முகத்துக்காக மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள். ரஜினி இன்னொருவரை காட்டுவதற்கு அவர் அரசியலுக்கு வராமல் வாய்ஸ் கொடுத்துக் கொண்டு சினிமாவிலேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணமே மக்களுக்கு வரும். இதையெல்லாம் ரஜினி அறியாதவரா என்ன?” என்று கேட்கிறார்கள்.
**-வேந்தன்**�,