பாலியல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை மூன்று மாத காலத்துக்குள் முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தொடர் விசாரணை நடந்து வருகிறது
இந்தச் சூழலில், தனக்கு எதிராக நடத்திய விசாகா குழு விசாரணை ஒருதலைபட்சமானது என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஷ் தாஸ் மேல் முறையீடு செய்தார். தற்காலிக பணிநீக்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் பணியிடை நீக்கக் காலத்துக்கான 50 சதவிகித ஊதியமும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் ராஜேஷ் தாஸ் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று (நவம்பர் 16) விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், இவ்வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
**-பிரியா**
�,