அதிமுகவின் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி குறித்து விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியையும் சந்தித்துப் புகார் கூறினார்கள்.
இதுபற்றி மின்னம்பலத்தில் [ராஜேந்திரபாலாஜி: நள்ளிரவு 12 மணி வரை விசாரணை நடத்திய வேலுமணி](https://minnambalam.com/politics/2020/07/18/16/rajendra-balaji-selam-covai-virudhunagar-dist-admk) என்ற தலைப்பில் செய்தி நேற்று (ஜூலை 18) வெளியிட்டிருந்தோம்.
ஜூலை 16 ஆம் தேதி சேலத்தில் முதல்வரையும், ஜூலை 17 ஆம் தேதி இரவு வேலுமணியையும் அவர்கள் சந்தித்தார்கள். விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் சொன்ன புகார்களை எல்லாம் கேட்டு ஆடிப்போன வேலுமணி, ‘நீங்க இதப்பத்தி ஓபிஎஸ் அண்ணனையும் பார்த்து சொல்லிடுங்க” என்று கேட்டுக் கொண்டார். அதையடுத்து நேற்று (ஜூலை 18) போடி சென்று அங்கே துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்துள்ளனர் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள்.
அனைவருக்கும் டீ கொடுத்து உபசரித்த ஓ.பன்னீர் செல்வம், அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டார். முதல்வர் என்ன சொன்னார், வேலுமணி என்ன சொன்னார் என்பதையும் ஓபிஎஸ் சிடம் தெரிவித்தார்கள் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள். அவர்களில் சிலர், “வேற யாரை வேண்டுமானாலும் மாவட்டச் செயலாளராக போடுங்க. ஆனா ராஜேந்திர பாலாஜியை மட்டும் போட்டுறாதீங்க:” என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
உதடு திறக்காத புன்னகையோடு அனைத்தையும் கேட்டுக் கொண்ட ஓபிஎஸ், “எல்லாரும் போயிட்டு வாங்க ஒரு வாரத்துல உங்களுக்கு நல்ல சேதி வரும்” என்று சொல்லியிருக்கிறார்.
இது வழக்கமான வார்த்தைகளா அல்லது நடவடிக்கைக்கான அச்சாரமா என்ற குழப்பத்துடன் விருதுநகருக்குத் திரும்பினார்கள் அதிமுக மாவட்ட நிர்வாகிகள். நாளை (ஜூலை 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீரும் சந்திக்க இருப்பதாகவும் அப்போது இதுபற்றி விவாதிப்பார்கள் என்றும் அதிமுக மேல்மட்ட வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
**-ஆரா**�,