ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் ஆதாரங்கள் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
விருதுநகரைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் விஜய நல்லதம்பி ஆகியோர் இது தொடர்பாக
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தனிதனியாக புகார் அளித்தனர். அதில், ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் கைது செய்து விடுவார்கள் என்பதால் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று (நவம்பர் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜரானார்.
அவர் வாதிடுகையில், ரவீந்திரனின் மருமகனுக்கு ஆவினில் மேலாளர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் விஜய் நல்லதம்பி முதல் குற்றவாளியாகவும், ராஜேந்திர பாலாஜி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதுபோன்று பலருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் மற்றொரு வழக்கு ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட்டுக்கு இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. புகார்தாரர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தாவியவர். விஜய் நல்லதம்பி தான் இந்த மோசடியைச் செய்துள்ளார்.
ஆனால் அவரை போலீஸார் பாதுகாக்கின்றனர். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசிவிட்டார் என்பதால் ராஜேந்திர பாலாஜியை அரசியல் ரீதியாகப் பழிவாங்க இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. போலீஸ் விசாரணைக்கு ராஜேந்திர பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று வாதிட்டார்.
இதையடுத்து அரசுத் தரப்பில், ரவீந்திரனிடம் 30 லட்சமும் பிறரிடம் பல கோடி ரூபாயும் பெற்று ராஜேந்திர பாலாஜி மோசடி செய்துள்ளார். எனவே இதை ஒரே குற்றமாகக் கருத முடியாது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் இதுவரை 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் இந்த பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுபோன்று நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி நிர்மல் குமார் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
**-பிரியா**
[ஆவின் வேலைக்கு பணம்: வசமாய் சிக்கிய மாஜி!](https://minnambalam.com/politics/2021/11/18/30/Money-laundering-case-Rajendra-Balaji-seeks-pre-bail)
�,