விசாரணை கைதி மரணம்: நடந்தது என்ன?

Published On:

| By admin

விசாரணை கைதி ராஜசேகரிடம் பன்றி கட்டு விசாரணை செய்ததால் இறந்துள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கொடுங்கையூர் பி6 காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் 35 சவரன் நகைகள் திருடுபோன வழக்கில் போலீசார் குற்றவாளியைத் தேடி வந்தனர். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜன் தலைமைச் செயலகம் பகுதிக்கு டியூட்டிக்கு போனதால், சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதன்மை காவலர்களான ஜெயசங்கர், மணிவண்ணன் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, செங்குன்றம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அலமாதி பகுதியில் வசித்து வந்த அப்பு என்ற ராஜசேகர் நகைகளைத் திருடியிருக்கலாம் என சந்தேகித்து அவரை தேடினர்.

திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியில் ‘நான் ரொட்டி’ என்ற பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் வீட்டில் ராஜசேகர் தங்கியிருப்பதை உறுதி செய்த போலீசார் நேற்று காலை 5 மணிக்கு அங்குச்சென்று கைது செய்தனர். அவரை, எவரஸ்ட் காலனி பகுதியில் உள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது திருடியதை ஒப்புக்கொண்ட ராஜசேகர், திருடிய பொருள் எங்குள்ளது என்பதை சொல்ல மறுத்ததாக தெரிகிறது.

இதனால், ‘இப்படியெல்லாம் கேட்டால் வாயை திறக்கமாட்டான், பன்றி கட்டு விசாரணை நடத்துங்கள்’ என இன்ஸ்பெக்டர் போலீஸ் பாஷையில் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இப்படி விசாரணை நடத்தும் போதுதான் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துள்ளார் ராஜசேகர்.

இதுதொடர்பாக சிட்டி போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, “பன்றி கட்டு என்றால் இரண்டு கைகள், இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து கட்டிப் போட்டு அதற்குள் கம்பு அல்லது இரும்பு பைப் விட்டு தொங்கவிடுவார்கள். அப்போது வலிதாங்க முடியாமல் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உண்மையை மறைக்காமல் சொல்லிவிடுவார்கள்.

அப்படி, பன்றி கட்டு விசாரணை செய்த போதுதான் நெஞ்சு வலிக்கிறது என கூறினார் ராஜசேகர். கீழே இறக்கி கை கால்களை அவிழ்த்துவிட்டு கொடுங்கையூரில் உள்ள பவித்ரா என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீசார். மருத்துவமனையில் டாக்டர் இல்லை என்பதால் டீ வாங்கி கொடுத்து மீண்டும் எவரஸ்ட் காலனியில் உள்ள அவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, தரையில் சுருண்டு விழுந்ததும் பதறிப்போன போலீஸ் டீம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்” என்கிறார்கள்.

ராஜசேகரின் அண்ணன் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் என் தம்பியை பார்த்து இரண்டு வாரம் ஆகிறது. நேற்று இரவு எனக்கு பல போலீசாரிடம் இருந்து போன் வந்தது. என் பேர், முகவரி எல்லாம் கேட்டார்களே தவிர தம்பி இறந்துவிட்டதாகச் சொல்லவில்லை. என் நண்பர் ஒரு செய்தியில் பார்த்து பின்னர் என்னிடம் கூறிய பிறகுதான் ராஜசேகர் உயிரிழந்தது தெரியவந்தது.

நெஞ்சில் எட்டி உதைத்துள்ளனர். அவர் தொடையில் காயங்கள் இருந்தன. ராஜசேகருக்கும் காவல் துறையில் உள்ள சிலருக்கும் தொடர்புகள் இருந்தன. சிறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தது. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லுவான். இவர்களுக்குள் ஏதோ மர்மமான ஒன்று நடந்துள்ளது. அதனால் தான் அடித்து கொலை செய்திருக்கின்றனர்” என்று கூறினார்.

தாய் உஷாராணி கூறுகையில், “போலீசாரால் அடித்துக் கொல்லப்படுபவர்களில் எனது மகன் அப்புவே கடைசியாக இருக்க வேண்டும். அடித்தே கொன்றுவிட்டனர். என் மகன் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். சனி கிழமை இரவு என் கையால் சோறு சாப்பிட்டு சென்றான். அதன் பிறகு அவனை பார்க்கவில்லை. சம்பந்தப்பட்ட 5 காவலர்களையும் கைது செய்து அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும். ஷூ காலால் எட்டி உதைத்திருக்கின்றனர். உடலில் ஆங்காங்கே வீக்கமும் காயம் உள்ளது. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

இறந்துபோன அப்பு என்ற ராஜசேகர் மீது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மற்றும் திருவள்ளூர் அகிய பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணை கைதி மரண வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், வல்லரசு என்கவுன்டர் வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share