சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்று மாலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன்,” சென்னையிலிருந்து 250 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும். இது புயலாக மாற வாய்ப்பில்லை. ஆனால், இதன் காரணமாக இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும். குறிப்பாக இதுபோன்ற வேளையில் இரவு முதல் அதிகாலை அதிகமழைபெய்வது வழக்கம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடந்த பிறகு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பிற்பகலுக்கு பிறகு மழை குறையத் தொடங்கும். அரபிக் கடலிலிருந்து வீசிய காற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியை நோக்கி நகர்ந்ததால் நெல்லையில் கனமழை பெய்தது.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும்” என்று கூறினார்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில்மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திடீர் காற்று, மழைபொழிவு சூழல் நிலவுவதை குறிக்கிறது. கடலுக்குள் புயல் உருவாவதற்கான வானிலை சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கும் வகையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வரும் நரியனோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான காந்தள், கீரின்பீல்ட்டு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பேருந்து நிலைய சாலை, ரயில்வே பாலம் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடைப்பட்டது.
சென்னை பூவிருந்தமல்லியில் சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதுபோன்று பல்வேறு இடங்களில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,