]மழை: மேலும் மூன்று பேர் உயிரிழப்பு!

politics

நேற்று மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று யாருமே ஏன், சென்னை வானிலை ஆய்வு மையமே எதிர்பாராத நிலையில் சென்னையில் பேய் மழை பெய்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையினால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் நேற்றிரவு 12 மணிக்குதான் வீடு திரும்பினர்.

நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னையில் கள ஆய்வில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தினார். அதன்படி இன்று காலையில் பல இடங்களில் மழைநீர் மின் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தது.

ஒரளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய சென்னை மக்கள் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மீண்டும் முற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் போட ஆரம்பித்தது. அதனால் மக்கள் அனைவரும் நேற்றைய நிலை இன்றும் ஏற்படுமோ என்று அச்சப்பட்டனர். அதுபோன்று மதியத்துக்கு பிறகு சென்னையில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. தற்போதும் மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கம், எழும்பூர், மாம்பலம், டி.நகர்,சைதாபேட்டை, பள்ளிக்கரணை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் நீர் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய அளவுக்கு இல்லையென்றாலும், இன்றும் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். டி.நகர் பேருந்து நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மழை காரணமாக புத்தாண்டு பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கக் கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் உள்ளனர்.

மழை காரணமாக நேற்று மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. 48 மணி நேரத்திற்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *