பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின்போது சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பு தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மேற்கொண்ட ஆய்வில் கட்டடம் தரமற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஐஐடி குழுவும், குடியிருப்பு கட்டுமான பணியை மேற்கொண்ட, பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தைத் தடை பட்டியலில் சேர்க்கவும், அரசு ஒப்பந்தங்களில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என்றும் தெரிவித்தது.
சென்னை புளியந்தோப்பு கட்டடம் தொடங்கி பல மருத்துவக் கல்லூரி கட்டடங்களை இந்நிறுவனம் கட்டியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்நிறுவனத்திற்கு அதிகளவில் கட்டுமான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் கையில் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசுக்கு சொந்தமான நாமக்கல்லிலுள்ள உள்ள பிஎஸ்டி நிறுவனம், நாமக்கல் அருகேயுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் காலை எட்டு மணி முதல் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுவரை என்னென்ன கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஆகியவை குறித்து தென்னரசுவிடம் அவரது அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக, தமிழ்நாடு முழுவதும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,