அதிமுக முகக்கவசம் அணிந்துள்ளது: சேலத்தில் ராகுல் காந்தி

தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வருகிறது.ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 2 ஆம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர்.

ஏற்கனவே, திருச்சியில் திமுக மார்ச் 7ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 28) மாலை, 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி விமானம் மூலம் சென்னை, வந்து பின்னர் அங்கிருந்து சேலம் வந்தார். பொதுகூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் , “வருகிற காலம் புதிய வரலாறு படைக்கிற காலம், தமிழகத்தில் எழுச்சி மிக்க எதிர்காலம். பேரறிஞர் அண்ணாவும், பெரியாரும், காமராஜரும், கலைஞரும் காட்டி சென்ற பாதையில் செல்லக் கூடிய பாதை, இந்த பாதை. நாளை இந்த பாதை வெல்லும்” என்று பேசினார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “10 ஆண்டுகாலம் பட்டதுபோதும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். பாஜகவிடம் அடகு வைத்துள்ள அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். இது அதிகாரத்திற்கான அரசியல் போர் இல்லை இந்த தேர்தல். சனாதனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் ஒரு கருத்தியல் போர் இந்தத் தேர்தல் யுத்தம்.

இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடக்கிற சராசரியான தேர்தலாக இதைத் தமிழக மக்கள் பார்த்துவிட வேண்டாம். தமிழ்நாடு ஆபத்தான ஒரு சூழலில் சிக்கியுள்ளது. மிகவும் மோசமான ஆபத்தான கொள்கை கொண்டவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் ஒரு ஆபத்து சூழ்ந்துள்ளது. இந்த நிலையில்தான் முற்போக்கு ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள் ஒன்று சேர்ந்து களத்தில் நிற்கிறோம்.

தேர்தல் நேரத்தில் உருவான கூட்டணி அல்ல இந்தக் கூட்டணி. 5 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் இந்த ஆபத்தையெல்லாம் முன்கூட்டியே கணித்து இந்தக் கூட்டணியைக் கட்டி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எதிரணியில் இருப்பவர்கள், பேரம் பேசி சந்தர்ப்பவாத அடிப்படையில் கூட்டணியை அமைத்துள்ளார்கள்.

ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. பிற்போக்கு சக்திகள் இம்மண்ணை கைப்பற்றிவிடக் கூடாது, சாதி வெறி, மதவெறி கூட்டத்தால் பாழ்பட்டுவிடக் கூடாது, சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக தான் இந்த மதச்சார்பற்ற கூட்டணி உருவாக்கப்பட்டது.

தமிழகத்தை காப்பதற்காக, நீட், புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை,ஏன் குடியுரிமை திருத்தச் சட்டம் என அனைத்தையும் எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்து போராடி இருக்கிறோம்.

தற்போது, கருணாநிதி இல்லை, ஜெயலலிதா இல்லை என்ற காரணத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மதவெறியைத் தூண்டிவிட்டவர்கள், அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள். ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. தோற்றுபோய் நிற்கிறார்கள்.

அதிமுக, பாமக முதுகில் பயணம் செய்து, தமிழகம், புதுவையில், வலிமை பெற்றுவிடலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். அதிமுக நீர்த்துபோய்விட்டது, பாமக விலை போய்விட்டது. இந்த இரு கட்சி மூலம் தமிழகத்தில் நுழைந்த கட்சிதான் பாஜக. பாஜகவுக்கும், திமுக கூட்டணிக்கும் இடையிலான போட்டிதான் இந்த தேர்தல்.

ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது. தமிழகத்தின் பெயரை தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் சூட்ட முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அண்ணா எடுத்த முயற்சி, சங்கரலிங்கனார் எடுத்த முயற்சி அவரது போராட்டம் என வரலாறு உள்ளது. ஆனால் அவை

அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்க ஆர்எஸ்எஸும், பாஜகவும் முயல்கின்றன.

சென்னையைத் தனி யூனியன் பிரதேசமாக மாற்றி தங்கள் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

எனவே அவர்கள் ஒன்று அல்லது இரண்டு இடத்தில் வெற்றி பெற்றால் கூட, நாட்டுக்கு ஆபத்து. அதிமுக, பாமகவினருக்கு ஓட்டுப்போடுவது என்பது , பாஜகவுக்கு போடுவதற்கு சமம். எனவே, அந்த கூட்டணி கட்சிகளை அடியோடு புறந்தள்ள வேண்டும். 234 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால்தான் சாதிய,மதவாத சக்திகளை துரத்த முடியும்” என்று உரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “தேர்தல் முடிவுக்கு பிறகு நடைபெறும் வெற்றி விழா அல்லது நன்றி தெரிவிக்கும் கூட்டம் போல் இது உள்ளது. 234 தொகுதியிலும் பாஜக தான் போட்டியிடுகிறது… எடப்பாடிக்கும் மோடிக்கும் தண்டனை கொடுக்கும் நாள் ஏப்ரல் 6ஆம் தேதி. 20 தொகுதிகளிலும் பாஜகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்” என்று பேசினார்.

இவர்களைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், “இந்த ஆட்சிக்காலத்தில் தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கிச் சென்றுள்ளது. பிரதமர் மோடிக்கு, அமித் ஷாவுக்கு அடி பணிந்து இருக்கக் கூடிய ஆட்சியாக பழனிசாமி ஆட்சி உள்ளது.

நீட் தேர்வு நுழைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இந்தி நுழைக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள் பறி போயுள்ளன. தமிழகத்தில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு மட்டும் அல்ல. தமிழகத்தை காப்பாற்றுவதற்காக, சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக, மாநில உரிமையை மீட்பதற்காக நடைபெறக் கூடிய தேர்தல் இந்த தேர்தல்.

பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு மக்களை பற்றி கவலை இல்லை. அவர்களின் ஆட்சியில் கமிஷன், ஊழல் தான் நடந்துகொண்டிருக்கிறது. காவிரி உரிமையை தர முடியாத மத்திய அரசு, அதனை கேட்க முடியாத தமிழக அரசு, காரணமாக தமிழகம் பாதி அளவு பாழ்பட்டு போயுள்ளது.

தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை என்பதால், அதிமுகவை மிரட்டி, அவர்கள் மூலம் முயற்சி செய்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடைபெறக்கூடிய அனைத்து விஷயங்களும் பாஜக சதி என்பது, டெல்லியில் இருந்து பாஜக தலைவர்கள் வந்து செல்வதன் மூலம் தெரியவருகிறது.

டி.ஜி.பி வீடு, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. மத்திய அரசிடம் இணக்கமாக உறவு வைத்திருப்பதால் தேவையான நிதியைப் பெற முடிகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்.

வர்தா புயல் தாக்கத்தின் போது 22,523 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டது. ஆனால், 266 கோடி ரூபாய் தான் மத்திய அரசிடம் இருந்து வந்தது. ஓகி புயலின் போது மத்திய அரசிடம் 9,302 கோடி ரூபாய் கேட்டது. வந்தது 133 கோடி ரூபாய்தான். கஜா புயலின் போது, 17,899 கோடி ரூபாய் கேட்டது. ஆனால் வழங்கப்பட்டது 1,145 கோடி ரூபாய் தான். நிவர் புயல், புரெவி புயலுக்கெல்லாம் நிவாரணம் கிடைத்ததா?. ஜி.எஸ்.டி வரிப்பணம் கிடைத்ததா? கொரோனா பாதிப்புக்கான நிதி வந்ததா? பிறகு எதற்கு மத்திய அரசுடன் கூட்டணி” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ ராகுல் காந்தியிடம் போனில் பேசும்போது சார் என்று அழைப்பேன். உடனே, அவர் மறுத்து சார் என்று அழைக்க வேண்டாம். சகோதரர் என்று அழையுங்கள் என்று உரிமையுடன் கூறுவார். அந்த உரிமையுடன் ராகுல் காந்தியிடம், ஒரு அன்பான வேண்டுகோள்…. இன்று இந்தியா பாசிச கும்பலிடம் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை காக்க வேண்டிய பெரும் கடமை உங்களிடம் இருக்கிறது. தமிழகத்தைபொறுத்தவரையில் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் வெற்றி பெறமுடியவில்லை.

தமிழகத்தில் பாஜக வாஷ் அவுட் என்ற நிலைதான் வர போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்ற வாக்குகள் 37 சதவீதம் தான். ஆனால், 63 சதவீதம் பேர் பாஜக வேண்டாம் என்று வாக்கு அளித்துள்ளனர். வாக்குகளை கட்சிகளுக்கு பிரித்து அளித்துள்ளனர். . இதனால், இந்திய அளவில், ஒரு கூட்டணி அமைவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என ராகுலை கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஸ்டாலினைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “தமிழகத்தில் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறோம் அவை 2 அரசியல் கட்சிகள் இடையிலான போராக இருக்கும். இந்த தேர்தல் தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை முறியடிப்பதற்கான தேர்தல் ஆகும். தமிழகம் தான் இந்தியா என்கிறோம், அதேபோல் இந்தியா தான் தமிழகம் எனக் கூறலாம். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், மொழி, மதங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதுதான். எந்த ஒருமொழியும் மற்ற மொழியை விட உயர்ந்தது என யாரும் மார்தட்டிகொள்ள முடியாது. அனைத்து மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் தான் இந்தியாவை உருவாக்கியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்று அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்கிறோம். இதன்மூலம், முகபாவம், எண்ணம் எப்படி தெரியாதோ அதுபோலத்தான் அதிமுகவும். அதிமுக போன்ற தோற்றத்துடன் உள்ள கட்சி. இப்போது முகக்கவசத்தை நீக்கினால் ஆர்எஸ்எஸ், பாஜகவாகத்தான் இருக்கும். இது பழைய அதிமுக அல்ல. பழைய அதிமுக இறந்துவிட்டது. தற்போது பாஜக, ஆர்எஸ்எஸால் இயக்கக் கூடிய ஒரு அமைப்பாக இருக்கிறது

ஒரு தமிழர் கூட மோடி முன்னாள் தலைகுனிந்து நிற்க விரும்பவில்லை. அதுபோன்று, அமித் ஷா, மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார். அப்படி இருக்கும் போது, ஏன் முதலமைச்சர் மோடி மற்றும் அமித் ஷாவின் காலில் விழ வேண்டும் என்று கருதுகிறார்” என்று கேள்வி எழுப்பி கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

**-பிரியா**

�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts