ஜிடிபி வீழ்ச்சி: மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

Published On:

| By Balaji

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் தெரிவித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது ஜிடிபி வீழ்ச்சி குறித்தும் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் 2020-21 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி -7.3 சதவிகிதமாக இருப்பதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவிகிதம் வளர்ச்சி அடைந்த நிலையில் 2020-21ஆம் ஆண்டில் -7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

PM’s hall of shame-

Minimum GDP
Maximum Unemployment. pic.twitter.com/9jQOCSaWgh

— Rahul Gandhi (@RahulGandhi) June 1, 2021

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டரில், “நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இது பிரதமரின் அவமானம்” என்று பதிவிட்டு, வேலைவாய்ப்பின்மை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை விளக்கும் வரைபடத்தையும் இணைத்து வெளியிட்டியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “கடந்த நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி -7.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதன்மூலம் இந்த நிதி ஆண்டு கறுப்பு ஆண்டாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதைக் கையாள்வதற்கான நிர்வாகத் திறன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இல்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசு, தனது கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் யோசனைகளைக் கேட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share