ராகுலிடம் 10 மணி நேரம் விசாரணை: மீண்டும் சம்மன்!

Published On:

| By admin

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் ஏறத்தாழ 10 மணி நேரம் நேற்று அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. மீண்டும் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பண பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஜூன் 23ஆம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் நேற்று காலை அமலாக்கத் துறையில் ஆஜராவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு சென்றார் ராகுல் காந்தி. அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் சென்றனர்.

ஆனால் சற்று தூரத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தொண்டர்கள் ஆவேசம் அடைந்து பேரிகார்டுகளை வீசி எறிந்தனர். இதில் போலீசார் சிலரை குண்டு கட்டாக கைது செய்தனர். ராஜஸ்தான் முதல்வர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தள்ளியதில் ப.சிதம்பரத்துக்கு விலா முறிவு ஏற்பட்டுள்ளதாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். 3 போலீசார் தள்ளியதில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,10 நாட்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும், நலமாக இருக்கிறேன் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமலாக்கத் துறையில் ஆஜரான ராகுல் காந்தியிடம் காலை 11.10 மணியளவில் தொடங்கி, மதியம் உணவு இடைவெளி போக இரவு 9.30 மணி வரையில் ஏறத்தாழ 10 மணி நேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

யங் இந்தியா நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுவது பற்றி இந்த விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 50-வது பிரிவின்கீழ் ராகுல்காந்தியின் வாக்குமூலம் வீடியோ பதிவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பெறப்பட்டது.

இதனிடையே மீண்டும் இன்று (ஜூன் 14) ஆஜராக ராகுல் காந்திக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share