காங்கிரஸின் முன்னாள் அகில இந்திய தலைவரும், முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கடக்கிறார். இதை ஒட்டி அவரது காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுதும் கொண்டாட்டங்களுக்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதை ஒட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியில், “நம்முடைய அன்புத் தலைவர், இளம் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் ஜூன் 19 ஆம் தேதி நிகழ்கிறது. அந்த நாளை தமிழக காங்கிரஸ் விவசாயிகளின் பாதுகாப்பு நாளாக கொண்டாட இருக்கிறோம். அந்த நாளில் ஒவ்வொரு தேசிய தோழரும் ஒரு விவசாயியை சந்தித்து நம்முடைய நல்லெண்ணத்தை வெளிக்காட்டுகிற வகையில் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் பரிசாக அவர்களுக்கு ஏதாவது ஒரு விதையை பரிசளிக்கவேண்டும். அதே போல ஒரு மரக்கன்றை ஒவ்வொரு தேசிய தோழரும் அவரது இல்லத்திற்கு முன்பாக நட்டு அதற்கு வேலி அமைத்து, உரமிட்டு, அதை ஒரு பெரிய விருட்சமாக வளர்க்கவேண்டும். தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை ஒரு மக்கள் இயக்கமாக உருமாற்ற, இந்த முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. நீங்கள் கை கொடுக்கவேண்டும். நாம் ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே சீன-இந்திய எல்லையான லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் இருபது பேர் சீன ராணுவத்தால் தாக்கிக் கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி தனது 50 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடவேண்டாம் என்று முடிவு செய்தார். இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று, “கொரோனா பாதிப்பு மற்றும் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்ததையொட்டி, இந்த ஆண்டு தமது பிறந்த நாளை (19-06-2020) கொண்டாடப் போவதில்லை என ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். இதையொட்டி காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், சீன ராணுவ தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஏழைகளுக்கு உணவு வழங்குமாறும், சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் வலியுடனும், இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் இருக்கும் போது, அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். கேக் வெட்டுவது, கோஷம் எழுப்புவது, பேனர்கள் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். பிறந்தநாள் நிகழ்ச்சியை தொடங்கும் முன்பு, உயிர் நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதை ஒட்டி நேற்று இரவு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள செய்தியில், “ஏற்கனவே முடிவு செய்தபடி ராகுல் காந்தியின் பிறந்தநாளை விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுகிற வகையில் மரக்கன்றுகளை நடுவது, விதை நெல் வழங்குவது ஆகியவற்றை செய்ய வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி பிறந்தநாள் நிகழ்ச்சிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
**-வேந்தன்**
�,